சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் போலி செய்திகளை பலர் அப்படியே நம்பிவிடுவது உண்டு. அப்படி வைரலாகும் அமேசான் காடுகள் தொடர்பான புகைப்படம் ஒன்றின் உண்மைத் தன்மை குறித்து பார்ப்போம்.
சமூக வலைதளங்களில் அண்மையில் டிரெண்டான "10 YEARS CHALLENGE" ஹேஷ் டேக் மூலம் அமேசான் காடுகளும் அதிகம் பகிரப்பட்டு வந்ததை அறிந்திருப்போம். 2009 ஆம் ஆண்டு பசுமையாக காணப்பட்ட அமேசான் காடுகள், 2019ஆம் ஆண்டு வெட்டவெளியாகி இருப்பதைப் போல் இந்த புகைப்படம் வலம் வந்தது. தற்போதும் இந்த புகைப்படம் வாட்ஸ்அப் மூலம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து நமது FACT CHECK குழுவினர் ஆராய்ந்தனர். அதில், 2009 ஆம் ஆண்டு என குறிப்பிடப்பட்ட இந்த புகைப்படம், உண்மையானது தான். பரந்து விரிந்த அமேசன் காடுகளின் ஒரு பகுதி பெரு நாட்டிலும் பரந்து விரிந்துள்ளது. அந்த காட்டுப் பகுதியில் உள்ள நதிக்கரையின் கழுகு பார்வை காட்சி தான் இது. ஆனால், 2019 ஆம் ஆண்டு அமேசான் காடு என குறிப்பிடப்பட்டுள்ள இந்த புகைப்படம், அமேசான் பகுதி அல்ல. மாறாக 2010 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. காகித கூழ் தயாரிக்கும் நிறுவனம் காட்டின் ஒரு பகுதியை அழித்ததை வெளிப்படுத்தும் புகைப்படம். அந்த தருணத்தில் இதுகுறித்து பல்வேறு ஆங்கில நாளிதழிகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. சுமத்ரா புகைப்படம் தான் தற்போது அமேசான் காட்டின் நிலை என பரப்பப்பட்டு வருகிறது.
இந்த புகைப்படம் சுமத்ராவில் எடுக்கப்பட்டதாக இருந்தாலும், அமேசான் காடுகளில் ஒரு பகுதி அழிந்ததும் உண்மையானத் தகவல்தான். கடந்த 2019ஆம் ஆண்டு பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் ஏற்பட்ட தீயில் 1.8 மில்லியன் ஏக்கர் காடுகள் அழிந்துப் போனது வேதனையான உண்மையாக உள்ளது.