பெய்ரூட்டின் விபத்து நடந்த பகுதிக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய பெண் செவிலியரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப் பகுதியில் சுமார் ஆறு ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் நூறுக்கும் மேற்பட்டோர் பலியாகினர், சுமார் 4,000 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், பெய்ரூட்டின் ஒரு மருத்துவமனையில், வெடி விபத்தால் கட்டிடம் சேதமடைந்த போது சிகிச்சையில் இருந்து மூன்று பச்சிளம் குழந்தைகளை பத்திரமாக மீட்டு கையில் வைத்திருந்த செவிலியரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தை எடுத்தவர் புகைப்படக் கலைஞர் பிலால் ஜாவிச்.
அவர் இச்சம்பவம் குறித்து அதிர்ச்சியுடன் விவரிக்கையில், ‘’லெபனானில் மிகப்பெரிய வெடி விபத்து நிகழ்ந்த போது புகை மூட்டத்தை தொடர்ந்து சென்ற போது, அங்கு கண்ட காட்சிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டே ஐ ரௌம் மருத்துவமனையை அடைந்தேன். அந்தப் பகுதியும் வெடிவிபத்தால் பலத்த சேதமடைந்திருந்தது.
அங்கே ஆச்சரியமளிக்கும் வகையில் ஒரு செவிலியர் தனது கையில் மூன்று பச்சிளம் குழந்தைகளை வைத்துக் கொண்டு நின்றிருந்ததைப் பார்த்தேன். ஆனால் அவர் எந்த பதற்றமும் அடையவில்லை. மிகவும் அமைதியாகவே காணப்பட்டார். இவ்வளவுப் பெரிய விபத்துக் கூட அவரை பெரிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தவில்லை, காரணம், அந்த மூன்று குழந்தைகளை காப்பாற்றிவிட்டோம் என்ற ஒரு உணர்வு அவரிடம் இருந்தது’’ என்கிறார் ஜாவிச்.
பின்னர் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். வெடிவிபத்து காரணமாக அந்த மருத்துவமனையே நிலைகுலைந்திருந்தது. மருத்துவமனையின் 80 சதவிகித கட்டிடம் பெருத்த சேதமடைந்திருந்தது. மருத்துவமனை இடிந்து விழும் சமயத்திலும் குழந்தையை காப்பாற்றும் நோக்கத்தோடு செயல்பட்ட செவிலியரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.