அயர்லாந்து கவுண்டி டைரோன் பகுதியில் வசிப்பவர், நைஜெல் ஃப்ளெமிங். இவர், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, டோபர்மோர் பகுதியிலிருந்த ஒருவரிடமிருந்து கோல்டன் ரெட்ரீவர் வகையைச் சேர்ந்த நாய் ஒன்றை வாங்கியுள்ளார்.
அந்த நாய்க்கு, பழைய உரிமையாளர், ’கூப்பர்’ எனப் பெயரிட்டுள்ளார். அந்த நாயை வாங்கிய நைஜெல், பின்னர் டோபர்மோர் பகுதியிலிருந்து கவுண்டி டைரோனுக்குப் பகுதிக்குக் குடிபெயர்ந்து விட்டார்.
சரியாக 27 நாட்கள் கழித்து, நைஜெல் வாங்கிய நாய் காணாமல் போயுள்ளது. அவர், எங்கு தேடியும் கிடைக்காததால், செல்லப்பிராணிகளைத் தேடும் தொண்டு நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். அவர்களும் தீவிரமாய் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அந்த கூப்பர் நாய், சுமார் 64 கி.மீ தூரம் பயணித்து, பழைய எஜமானர் வீட்டுக்குச் சென்றுள்ளது. இந்த சம்பவம் அயர்லாந்து முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கூப்பர் யாருடைய உதவியும் இல்லாமல், 1 வார காலத்திற்குள் அவருடைய பழைய உரிமையாளரைச் சந்தித்திருப்பதுதான் பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து செல்லப்பிராணிகளைத் தேடும் தொண்டு நிறுவனமான லாஸ்ட் பாவ்ஸ் என்ஐ, ”அது வயல்வெளிகள் மற்றும் பிரதான சாலைகளில் செல்வதாகவும், அதிலும் இரவு நேரங்களில் அதிகமாக நடமாடுவதாகவும், குறிப்பாக அது தன் பழைய உரிமையாளரை நோக்கிச் செல்வதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
அது யாருடைய உதவியும் இன்றி தனியாகச் சென்றதாகவும் அங்குள்ள மக்கள் தகவல் தெரிவித்தனர். உண்மையில், கூப்பர் ஒரு புத்திசாலி. அது, தன்னுடைய பழைய உரிமையாளர் வீட்டுக்கு தனியாகச் சென்றிருப்பது மிகப்பெரிய விஷயம்” எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் பழைய உரிமையாளர், "கூப்பர் திரும்ப வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி நடக்கும் என்று எங்களால் கனவில்கூட நினைத்து பார்க்க முடியவில்லை. நாங்கள் கூப்பரை பிரிய மனம் இல்லாமல் இருந்தோம். ஆனால் எங்களால் தொடர்ந்து இதனை வளர்க்க முடியவில்லை. அதனால்தான், நாங்கள் இதனை நைஜலுக்கு கொடுத்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நைஜெல், "கூப்பரைக் காணாமல் தவித்தேன். ஆனால் கூப்பர், தற்போது பாதுகாப்பாக உள்ளது. இதனால் எனக்கு மகிழ்ச்சியே” எனத் தெரிவித்துள்ளார்.