உலகம்

ஆபரேஷன் தியேட்டரில் இருந்தபடி வழக்கு விசாரணையில் ஆஜரான மருத்துவர்...நீதிமன்றம் கண்டிப்பு

ஆபரேஷன் தியேட்டரில் இருந்தபடி வழக்கு விசாரணையில் ஆஜரான மருத்துவர்...நீதிமன்றம் கண்டிப்பு

EllusamyKarthik

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம், நடைமுறை வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஆன்லைன் துணையோடு ஆபீஸ் மீட்டிங், ஸ்கூல் கிளாஸ்ரூம், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை என அனைத்தும் விர்ச்சுவலாக நடந்து வருகின்றன. அந்த வகையில் கொரோனா பரவலின் காரணமாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நீதிமன்ற வழக்கு விசாரணை விரச்சுவலாக நடைபெற்று வருகிறது.

சாலை விதிகளை மீறியமைக்காக கலிபோர்னியாவில் வசிக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணரும், மருத்துவருமான ஸ்காட் கிரீன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டியிருந்தது. அவரும் நீதிமன்றம் தன்னை ஆஜராக சொன்ன நேரத்தில் ஜூம் கால் மூலம் ஆஜராகி இருந்தார். 

அவரை அந்த காலில் கனெக்ட் செய்த நீதிமன்றத்தின் கிளார்க் “விசாரணைக்கு தயாரா?” என கேட்டுள்ளார். அதோடு மருத்துவர் ஸ்காட் கிரீன் அறுவை சிகிச்சை கூடத்தில் OT உடையை அணிந்திருந்ததை பார்த்ததும் அது குறித்து அவரிடம் கேட்டுள்ளார். “நான் தயார். விசாரணையை ஆரம்பிக்கலாம்” என மருத்துவர் கிரீன் தெரிவித்துள்ளார். 

நீதிமன்ற கமிஷ்னர் கேரி லிங்க் அந்த காலில் இணைந்ததும் மருத்துவர் கிரீன் ஆபிரேஷன் தியேட்டரில் இருந்ததை பார்த்து அதிர்ந்து போயுள்ளார். அதோடு நோயாளியின் நலனே முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். “நான் சர்ஜரி செய்யவில்லை. வேறொரு மருத்துவர் தான் செய்கிறார். நான் உடன் இருக்கிறேன்”  என அதற்கு உடனடியாக பதில் கொடுத்துள்ளார் மருத்துவர் கிரீன். 

“நீங்கள் உங்கள் மருத்துவ பணியை செய்யாத நாளில் அல்லது வேளையில் நாம் விசாரணையை வைத்துக் கொள்ளலாம்” என சொல்லி வேறொரு நாள் விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிபதி சொல்லியுள்ளார். மருத்துவர் கிரீனும் தனது செயலுக்கு வருந்துவதாக வருத்தம் தெரிவித்தார். 

சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது துறை சார்ந்த நடவடிக்கையை விசாரித்து எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது கலிபோர்னியா மருத்துவ கழகம்.