அமெரிக்காவின் மிசோரி மாகாணம் கன்சஸ் நகரைச் சேர்ந்தவர் மரியா தாமஸ். இவருக்கு ஒரு மாத பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த நிலையில், மரியா தாமஸ்மீது அந்தக் குழந்தையைக் கொன்றதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின்படி அந்தப் பெண்ணின் குழந்தை இறந்துவிட்டதாக கிடைத்த தகவலையடுத்து, சந்தேகத்தின்பேரில் அவரது வீட்டுக்கு போலீசார் சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது குழந்தையின் உடலில் தீக்காயங்கள் இருப்பதைப் பாா்த்து போலீஸாா் மேலும் சந்தேகமடைந்துள்ளனர். அச்சமயத்தில்தான் மரியா தாமஸ் தன் குழந்தையை தொட்டிலில் தூங்கவைப்பதற்குப் பதிலாக மைக்ரோ வேவ் ஓவன் அடுப்பில் தவறுதலாக வைத்ததும், அதன் காரணமாக குழந்தை உயிரிழந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதுதொடா்பாக ஜாக்சன் கவுன்டி அரசு வழக்கறிஞா் ஜீன் பீட்டா்ஸ் பேக்கா், ”இந்த சோகமான சம்பவத்தின் கொடூரமான தன்மையை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். உயிரிழந்த குழந்தையை நினைத்து வருந்துகிறோம். சட்டம் தன் கடமையைச் செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையின் தாயான மரியா தாமஸை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மரியா தாமஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. தாமஸின் நண்பர், ”இந்தச் சம்பவத்திற்கு அவருடைய மனநல பாதிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.