உலகம்

“ஊட்டச்சத்து குறைவால் ஒரு தலைமுறைக்கே ஆபத்து” - ஐ.நா எச்சரிக்கை

“ஊட்டச்சத்து குறைவால் ஒரு தலைமுறைக்கே ஆபத்து” - ஐ.நா எச்சரிக்கை

webteam

ஏமனில் நான்கு ஆண்டுகளாக நீடித்த போர் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

ஏமான் நாட்டில் வேளாண் உள்ளிட்ட முக்கிய தொழில்கள் முடங்கியதால், பொருளாதாரம் படுபாதாளத்துக்கு சென்றுள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கானோர் பட்டினியால் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இ‌ல்லாமல் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஐ.நா.வின் முயற்சியை தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையிலான சண்டை தற்போது ஓய்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து முக்கிய துறைமுகமான ஹொதைதாவில் கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனினும் நான்கு ஆண்டுகளாக நீடித்த போர் காரணமாக லட்சக்கணக்கானக் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். 

இதனால் ஒரு தலைமுறையே உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும், உயிரிழப்புகளைத் தடுக்க, விரைவான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.