உலகம்

62 நாட்கள் கொரோனா சிகிச்சை : தலைசுற்ற வைக்கும் மருத்துவமனை பில்..!

62 நாட்கள் கொரோனா சிகிச்சை : தலைசுற்ற வைக்கும் மருத்துவமனை பில்..!

webteam

(கோப்பு புகைப்படம்)

அமெரிக்காவில் கொரோனா வைரஸ்க்கு 62 நாட்கள் சிகிச்சை பெற்ற நபருக்கு 1.1 மில்லியன் டாலர், சிகிச்சை கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக கொரோனா பாதிப்பு கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இதுவரை அங்கு 21,42,224 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,54,106 பேர் சிகிச்சை பலன்பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில்  16,744 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால் அவர்களுக்கு வெண்டிலேட்டர்கள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று கொரோனாவிலிருந்து மீண்ட ஒருவரது மருத்துவமனைக் கட்டணம் தலைசுற்று வைக்கும் வகையில் அமைந்துள்ளது. மைக்கெல் ஃப்ளோர் என்ற அந்த நபர் 62 நாட்கள் கொரோனா வைரஸுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதில் 29 நாட்கள் அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்ட அவருக்கு, 181 பக்கங்கள் கொண்ட கட்டண ரசீதை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளது. அதில் 3,000 மேற்பட்ட உபகரணங்களுக்கான கட்டணமும் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 1.12 மில்லியன் டாலர் ( ரூ.8.14 கோடி) அவருக்கு கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.