உலகம்

சுதந்திர தின அணிவகுப்பிலேயே துப்பாக்கிச்சூடு... அமெரிக்காவில் மீண்டுமொரு கோர சம்பவம்

சுதந்திர தின அணிவகுப்பிலேயே துப்பாக்கிச்சூடு... அமெரிக்காவில் மீண்டுமொரு கோர சம்பவம்

நிவேதா ஜெகராஜா

அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் 246-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி இல்லினாய்ஸ் மாநிலத்தின் சிகாகோ நகரில் உள்ள ஹைலேண்ட் பூங்காவில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அடையாளம் தெரியாத நபர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு படையினர், படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அணிவகுப்பு நடைபெற்ற இடத்தில் இருந்து துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், தப்பிச்சென்ற நபரை தேடி வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் நீண்ட முடி வைத்திருந்ததாகவும் 18 முதல் 20 வயது உடைய இளைஞர் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சுதந்திரத் தினத்தன்று நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும் நாட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளதாகவும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். குற்றவாளியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டு இருப்பதாக ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் கடந்த மே மாதம் இரு வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.