இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கையை பிரதமர் மோடி தவறாக குறிப்பிட்டு உலக பொருளாதார மாநாட்டில் பேசினார்.
உலக பொருளாதார மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி 48-வது உலக பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 4 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.
அங்கு உலக பொருளாதார மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கையை தவறாக குறிப்பிட்டு பேசினார். இந்தியாவில் 600 கோடி அதாவது 6 பில்லியன் வாக்காளர்கள் இருப்பதாக குறிப்பிட்டு பேசினார். 2014 பாராளுமன்றத் தேர்தலில் 600 கோடி இந்திய வாக்காளர்கள், வாக்களித்து தங்களது கட்சிக்கு பெரும்பான்மையை கொடுத்ததாக கூறினார். ஆனால் தேர்தல் ஆணையத்தின் கணக்கின்படி 2014 பாராளுமன்றத் தேர்தலில் 814.5 மில்லியன் வாக்காளர்கள் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்திலும் 6 பில்லியன் வாக்காளர்கள் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த ட்வீட் அப்பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.