இஸ்ரேல் பாலஸ்தீனம் மோதலுக்கு முக்கிய காரணம் இரு நாடுகளுக்குமிடையே இருக்கும் காசா என்ற பகுதியாகும். காசா பகுதி என்பது பாலஸ்தீனம் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதியை இஸ்ரேல் அரசு பெற அமெரிக்காவின் உதவியுடன் முயற்சித்து வருகிறது.
இதற்காக இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து வரும் போரால், காசா பகுதி மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதுடன், போர் நடக்கும் இடத்தில் போதிய உணவு, தண்ணீர் இன்றி தவித்தும் வருகின்றனர். ஒருபக்கம் போரினால் மக்கள் இறக்க, மறுபக்கம் பட்டினியால் இறக்கின்றனர்.
இவர்களின் பசியை போக்க, பல உலக நாடுகள் முயல்கிறது. அப்படி அமெரிக்காவும் தன் பங்கிற்கு உதவி வருகிறது. அதன்படி வான்வழி மூலம் கொண்டுவரப்படும் உணவு பொட்டலங்கள், பெட்டிகளில் வைக்கப்பட்டு அதை பாராசூட் உதவியுடன் காசா மக்களுக்கு விநியோகிக்கின்றனர். இதில் சில பாராசூட்கள் சரியாக விரியாமல், உணவு பெட்டியானது நேராக கூடியிருக்கும் மக்கள் தலையில் விழும் கொடூரம் நிகழ்கிறது. இதனால் அங்குள்ள மக்கள் உயிரிழந்தும் காயமடைந்தும் வருகின்றனர். இதுகுறித்து காசா மக்கள் முன்பே அமெரிக்க அரசிடம் எச்சரித்து இருந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் அமெரிக்க அரசின் அலட்சியப்போக்கால் இது தொடர்ந்துவருகிறது. இதில் உணவு பொட்டலங்கள் அடங்கிய பெட்டி கொண்ட பாராசூட் ஒன்று, நேற்று சரியாக விரியாமல் மக்கள் கூடியிருந்த பகுதியில் விழுந்துள்ளது. அந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் தெரிகிறது. உதவியே உபத்திரமாக மாறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விபத்து குறித்து, காசாவின் செய்தி தொடர்புத்துறை, “நாங்கள் ஏற்கெனவே இந்த திட்டத்தை பற்றி அமெரிக்காவுக்கு எச்சரித்திருந்தோம். மனிதாபிமான உதவிகள் என்கிற பெயரில் எங்கள் மக்களை மேலும் கொல்லாதீர்கள். நீங்கள் உண்மையில் எங்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தால், ராஃபா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் உணவு டிரக்குகளை காசாவுக்குள் அனுப்புங்கள். நிலத்தின் வழியாக உணவு பொருட்களை கொடுங்கள்” என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.