ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தங்கச் சுரங்க விபத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
சட்டவிரோத சுரங்கங்களை தடுக்கவும், தங்கம் மற்றும் செப்பு போன்ற இயற்கை வளங்களை சட்டத்திற்கு புறம்பாக சுரண்டப்படுவதை தடுக்கவும் ஆப்கானிஸ்தான் வெளிநாடுகளில் இருந்து நிதிபெறுவதற்கான இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் வடக்கு மலை மாகாணங்களில் நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்பட்ட வண்ணம் இருந்து வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கோகிஸ்தான் மாவட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமாக தங்க சுரங்கம் தோண்டியுள்ளதாக தெரிகிறது. கடும் பனிப்புயல் நிலவி வரும் அப்பகுதியில் திடீரென தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சுரங்கத்தில் இருந்த 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த மீட்பு படையினர் மற்றும் போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் நேக் முகமது நாஜரி கூறுகையில், குளிர்காலங்களில் கிராமவாசிகள் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதன் மூலம் தங்கள் வருமானத்தை ஈடுகட்ட முயற்சி செய்வதாகவும் தங்க சுரங்களில் நுழைவதற்கு அவர்கள் சுரங்கம் தோண்டிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் “பனிப்பொழிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. 30 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.” என தெரிவித்தனர்.