சிரியாவில் குழந்தைகள் கொன்று குவிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த அந்நாட்டு சிறுவனின் புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கவுட்டா பகுதியில் அரசுப் படையின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. நச்சு வேதிப் பொருள் மூலம் நடத்தப்படும் தாக்குதலால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள் ஏராளமானோர் உயிரிழந்தனர். கவுட்டாவில் ஆங்காங்கே சேகரித்து வைக்கப்படும் குழந்தைகளின் சடலங்கள், புகைப்படங்களாக வெளிவந்து சமூக வலைத்தளங்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக கவுட்டா முழுவதும் சுமார் 2 லட்சம் குழந்தைகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. இவர்களின் உயிரைப் பணயம் வைத்தே ரஷ்யாவும் சிரியாவும் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அரசுப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 3 வயது சிறுவனின் புகைப்படம், தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ஏனெனில் அந்த சிறுவன் இறப்பதற்கு முன் கடைசியாக, “நான் சென்று கடவுளிடம் அனைத்தையும் கூறப்போகிறேன்” என்று சொல்லிவிட்டு உயிரிழந்தார். அந்தச் சிறுவனின் புகைப்படம், அவர் கூறிய வாசகத்துடன் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.