உலகம்

500 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் விடுதலையான ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள்!

500 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் விடுதலையான ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள்!

webteam

500 நாட்களுக்கு மேலான சிறைவாசத்துக்கு பிறகு ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் இருவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்களான வா லோன் (32), கியா சோவூ (28) ஆகிய இருவரும் மியான்மரில் நடைபெற்ற அடக்குமுறைகள் குறித்து புலனாய்வு செய்து செய்திகள் வெளியிட்டனர்.  செய்தியாளர்கள் இருவரும் மியான்மர் அரசின் ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. செய்தியாளர்களின் மீதான குற்றச்சாட்டு உலக அரங்கில் எதிர்ப்பு கிளம்பியது. இது பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் செயலென பலரும் குரல் கொடுத்தனர். 

ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து செய்திகள் வெளியிடப்படுவதைத் தடுக்கவே இந்தக் கைது நடவடிக்கை எனவும் மியான்மர் அரசுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. ஆனாலும் செய்தியாளார்கள் இருவரும் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பும் வழங்கப்பட்டது.

சிறைத்தண்டனையை ரத்து செய்யக்கோரி செய்தியாளர்கள் இருவரும் மேல்முறையீடு செய்தனர். ஆனால் அதுவும் நிராகரிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த மியான்மருக்கான ஐநா தூதர், செய்தியாளர்களின் விடுதலைக்கு அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

செய்தியாளர்களின் மனைவிகள் அரசுக்கு கடிதங்களை எழுதினர். அதில் தங்கள் கணவர்கள் தவறேதும் இழைக்கவில்லை. அவர்களை விடுதலை செய்து குடும்பத்தினருடன் மீண்டும் இணைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர். 

இந்நிலையில் மியான்மரின் பாரம்பரிய புத்தாண்டை அடுத்து பொதுமன்னிப்புக்கோரி 1000க்கும் அதிகமான கைதிகளை விடுதலை செய்ய அதிபர் வின் மிண்ட் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் செய்தியாளர்கள் வா லோன் , கியா சோவூ ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 500 நாட்களுக்கு மேலான சிறைவாசத்துக்கு பிறகு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.