அதிக எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்டு ட்ரம்பை வீழ்த்தி, வெள்ளை மாளிகையில் சிம்மாசனமிட்டுள்ளார், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன்.
பைடனின் இந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்திய -ஆப்பிரிக்க வம்சாவழியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவியை அடைந்திருப்பதால் இந்தியாவில் பலரும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இவர்களைத் தவிர ஜோ பைடனின் வெற்றியை எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.
காரணம், திருநங்கை இனத்தவரை பைடன் தனது வெற்றி உரையில் குறிப்பிட்டதுதான். தன்பாலின சேர்க்கையாளர் மற்றும் திருநங்கைகளை நேரடியாக தனது வெற்றி உரையில் அவர் குறிப்பிட்டதற்கு சமூக ஊடகங்களில் பலரும் வாழ்த்துகளையும், புகழாரங்களையும் பைடனுக்கு சூட்டிவருகின்றனர். இவர்கள் தவிர, லத்தீன், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் பலரையும் தனது உரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக டெலாவேர் பகுதியில் வெற்றிபெற்றதை குறிப்பிட்டு, அவர்களுக்குக் கடமைப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எல்.ஜி.பி.டி.க்யூ மக்கள், இந்த வெற்றியைக் கொண்டாட மற்றொரு காரணம், டெலாவேர் மாகாணத்தின் முதல் செனட்டாக சாரா மெக்பிரைட் என்ற திருநங்கை தேர்ந்தெடுக்கப்பட்டதும்தான். அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு திருநங்கை செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டது இந்தமுறைதான்.
டெலாவேர் பகுதியில் எல்.ஜி.பி.டி.க்யூ உரிமைகளை நிலைநாட்ட மெக்பிரைட் போராடியுள்ளதுடன், அவர்களுக்கு சம உரிமை கொடுக்கப்படவேண்டும் எனவும் ஜோ பைடனிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதேபோல், தான் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் சம உரிமை வழங்குவதாக பைடனும் வாக்குக் கொடுத்திருந்தார்.
மேலும், ஒதுக்கப்பட்ட எல்.ஜி.பி.டி.க்யூ மக்கள், ராணுவத்தில் சேருவதற்கு உள்ள தடையை மாற்றுவதாகவும் பைடன் கூறியுள்ளார். இந்நிலையில் தனது வெற்றி உரையில் இந்த மக்களை குறிப்பிட்டுள்ளது அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.