தனது பாட்டியின் உடல்நிலையைப் புரிந்துகொண்டு சரியான நேரத்தில் காரை ஓட்டிச்சென்று உயிரை காப்பாற்றிய சிறுவன் அனைவராலும் ஹீரோ என புகழப்படுகிறான்
பி.ஜே ப்ரூவர் லே என்ற 11 வயது சிறுவன் தனது அண்டைவீட்டு சிறுவர்களுடன் கோ-கார்ட் வண்டியை ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தான். அங்கு நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்த அவனுடைய பாட்டி ஏஞ்சலாவுக்கு திடீரென நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது. அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் அவருக்கு உடனே உதவி தேவைப்படுவதை உணர்ந்த ப்ரூவர், தனது கோ- கார்ட் வண்டியிலேயே வேகமாக தனது வீட்டிற்குச் சென்று, அங்கிருந்து பாட்டியின் பென்ஸ் காரை ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறான்.
சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த தனது பாட்டியை காரில் ஏற்றி வீட்டுக்குக் கூட்டிச் சென்றிருக்கிறான். இதுபற்றி ப்ரூவரின் பாட்டி ஏஞ்சலா, ’’நான் சாலை ஓரத்தில் சாய்ந்து இருந்தேன். திடீரென அங்கு என்னுடைய பென்ஸ் கார் வருவதைப் பார்த்தேன். யார் ஓட்டிவருகிறார்கள் என பார்த்தபோது என்னுடைய பேரன். ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவன். ஆனால் நன்றாக கார் ஓட்டுவான். வீட்டில் காரை எடுக்க தனது தாத்தாவிற்கு உதவி செய்வான்.
என்னை காரில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்தான். அவன் சாலையை விட்டு வெளியே எங்கும் தடுமாறி ஓட்டாமல் சரியாக ஓட்டியதைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வீட்டிற்கு என்னை அழைத்துவந்து என்னுடைய குளுக்கோஸ் மாத்திரையை சரியான நேரத்தில் கொடுத்து என் உயிரைக் காப்பாற்றினான்’’ என்று கூறுகிறார்.
இதை ஏஞ்சலா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியது தவறுதான் என்றாலும், சரியான நேரத்தில் செயல்பட்டு பாட்டியின் உயிரை காப்பாற்றிய சிறுவன் ஹீரோ தான் பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்