உலகம்

”என்னையே இணையத்தில் தேடுறியா?” உளவுத்துறை அதிகாரிக்கு மரண தண்டனை அளித்த வடகொரிய அதிபர்

”என்னையே இணையத்தில் தேடுறியா?” உளவுத்துறை அதிகாரிக்கு மரண தண்டனை அளித்த வடகொரிய அதிபர்

webteam

வடகொரிய அதிபர் குறித்து இணையதளத்தில் தேடிய அந்நாட்டு உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பான், ஏவுகணை சோதனைகள் மூலம் வல்லரசான அமெரிக்கா ஆகியவற்றுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வரும் கிழக்கு ஆசிய நாடான வடகொரியா, உலகின் மற்ற நாடுகளிலிருந்து மாறுபட்டது. அதனாலேயே வடகொரியா நாட்டின் ரகசியங்கள் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை. அதுமட்டுமின்றி கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் அங்கே கடுமையானது என்று சொல்லப்படுவதும் உண்டு. வெளியுலகம் தொடர்பான தகவல்களை வடகொரிய மக்கள் தெரிந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அங்கு நடக்கும் நிகழ்வுகள் குறித்த தகவல் அதிகம் வெளியுலகிற்கு தெரிவதில்லை. அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றிய தகவல்களும் வெளியுலகிற்கு அதிகம் தெரியவில்லை. இதற்காக வடகொரியாவில் இணையத்தை பயன்படுத்த பல கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வடகொரியா அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன், தன்னை எதிர்ப்பவர்களையும் அரசுக்கு எதிராக சதி செய்பவர்களையும் தண்டிக்கும் வகையில் பலருக்கும் மரணத் தண்டனை விதித்து வருகிறார்.

இந்த நிலையில், கிம் ஜாங் உன் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடிய உளவுத்துறை அதிகாரியொருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 'பியூரோ 10' என்றழைக்கப்படும், அந்த நாட்டின் உளவு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், இணையதளத்தில் சமீபத்தில், அதிபர் கிம் ஜாங் உன் குறித்த தகவல்களை விவரமாக தேடியுள்ளார். இதனை எப்படியோ அறிந்துகொண்ட கிம் ஜாங் உன், அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். துப்பாக்கியால் சுடும் படைப் பிரிவினரால், அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இது, அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்நாட்டைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் தென்கொரியா டி.வி. நாடகம் பார்த்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்