உலகம்

“இந்தியா தனது நாட்டு நலனிற்கு முக்கியத்துவம் கொடுக்கும்” - ஈரான் நம்பிக்கை 

“இந்தியா தனது நாட்டு நலனிற்கு முக்கியத்துவம் கொடுக்கும்” - ஈரான் நம்பிக்கை 

webteam

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் இந்தியா தனது நாட்டிற்கான நலனிற்கு முக்கியத்துவம் அளிக்கும் என ஈரான் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

அமெரிக்கா கடந்த 2018ஆம் ஆண்டு ஈரான் உடனான அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது. இதனையடுத்து ஈரான் நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்து வந்தது. அத்துடன் ஈரான் நாட்டிடமிருந்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா அரசு பொருளாதார தடை விதித்தது. இதனையடுத்து ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தியது. 

இந்நிலையில் இந்தியாவிற்கான ஈரான் நாட்டின் தூதர் அலி சேகெனி இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்,“கச்சா எண்ணெய் விவகாரத்தில் இந்தியா தனது நாட்டின் நலனை கருதியே செயல்படும் என்று எதிர்பார்க்கிறேன். ஈரான் நாடு இந்தியாவிற்கு எரிசக்தி துறையில் பாதுகாவலனாக இருக்கும். 

ஏனென்றால் தற்போது இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியிருக்கிறது. ஆனால் எப்போதுமே ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்காது என்று கூறவில்லை. கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா அழுத்தம் அளித்தாலும் இந்தியா தனது நாட்டின் நலன் கருதி செயல்படும். இந்தியா எப்போதுமே ஈரானின் நல்ல நண்பன். எனவே ஈரான் நாட்டை இந்தியா நன்றாகவே புரிந்து கொள்ளும். மேலும் அமெரிக்க டாலர் பயன்படுத்தாமல் ரூபாய் அல்லது ஐரோப்பிய பணங்களை வைத்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளது. 

அமெரிக்கா தற்போது ஈரான்,வெனிசுலா மற்றும் க்யூபா போன்ற நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதித்து பயங்கரவாதத்தை கட்டமைக்கிறது. இந்தத் தடைகளின் மூலம் உலக நாடுகளிடமிருந்து அமெரிக்கா தன்னை தானே தனிமை படுத்திக்கொள்கிறது. அமெரிக்கா தடை விதித்தற்குப் பிறகும் எங்களிடமிருந்து சில நாடுகள் கச்சா இறக்குமதியை தொடர்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஈரான் இடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா மே மாதம் வரை விலக்கு அளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா இந்த விவகாரத்தில் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, வர்த்தக வாய்ப்புகள் மற்றும் வர்த்தக நிலை ஆகியவற்றை கருதி இறுதி முடிவு எடுக்கும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.