உலகம்

தலாய் லாமாவிற்கு நிதியுதவி செய்த கம்யூனிஸ்ட் தலைவர்கள்

தலாய் லாமாவிற்கு நிதியுதவி செய்த கம்யூனிஸ்ட் தலைவர்கள்

Rasus

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தனது கட்சியின் முக்கிய அதிகாரிகள் தலாய் லாமாவிற்கு நிதியுதவி செய்து வருவதாக ஒப்புக்கொண்டுள்ளது.

சீன அரசின் குலோபல் டைம்ஸ் என்ற பத்திரிக்கை ஆளும் கட்சி தலைவர்கள் சிலர் தலாய்லாமாவுக்கு நிதி உதவி அளிக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளது. சீன அரசாங்கம் பிரிவினைவாதிகளுக்கு எதிராக நடத்தும் சண்டையை இந்தச் செயல் வழுவிழக்கச் செய்கிறது என்றும் அது கூறியுள்ளது.

சீன அரசிற்கு எதிராகச் செயல்படும் 14வது தலாய் லாமாவிற்கு நிதி அளித்ததன் மூலம், நாட்டின் முக்கியமான அரசியல் பிரச்சினைகள் மற்றும் நாட்டின் பிரிவினைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை சில தலைவர்கள் உதாசீனப்படுத்தியுள்ளனர்” என திபெத்தின் ஒழுங்குமுறை கண்காணிப்புத் தலைவரான வாங் யோங்ஜூன் கூறியுள்ளார்.

தாலாய்லாமா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு முக்கியத் தகவல்களை கசிய விட்டு அவர்கள் பிரிவினைவாத செயல்களை முன்னெடுக்க சில தலைவர்கள் உதவியுள்ளனர் எனவும் நிதி உதவியும் அளித்துள்ளனர் எனவும் அந்தப் பத்திரிகை கூறுகிறது.

புத்தமத குருவான 14வது தலாய்லாமா திபெத்தை சீனாவிலிருந்து பிரிப்பதற்காக பணியாற்றி வருகிறார் என சீன அரசாங்கம் குற்றம்சாட்டுகிறது.

சீனவின் தொடர் கெடுபிடியாலும் கைது செய்யப்பட வாய்ப்பு அதிகம் இருந்ததாலும், தலாய்லாமா சீனாவில் இருந்து 1959-ம் ஆண்டு இந்தியா வந்தார். தங்களுடைய மத குரு திரும்ப தங்கள் நாட்டுக்கே வர வேண்டும் என 120க்கும் அதிகமான திபெத்தியர்கள் இதுவரை தீக்குளித்துள்ளனர்.