உலகம்

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக தனியாக போராடி வென்ற சுவீடன் சிறுமி 

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக தனியாக போராடி வென்ற சுவீடன் சிறுமி 

webteam

பருவநிலை மாற்றம் தொடர்பாக போராடி வரும் 16 வயது சிறுமி உலகநாடுகளின் தலைவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை விடுத்துள்ளார். 

சுவீடன் நாட்டை சேர்ந்தவர் கிரேட்டா தன்பெர்க் (16). இவர் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னேடுத்து வருகிறார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு போராட்டம் நடத்தினார். இதன்மூலம் அவர் உலகநாடுகளில் மிகவும் பிரபலம் ஆனார். இந்தப் போராட்டத்தின் போது அவர், “பருவநிலை மாற்றத்திற்காக பள்ளிக்கு செல்லவில்லை” என்று ஒரு வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினார். இவரின் இந்தப் படம் இணையதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

தனி ஆளாக இவர் மட்டுமே சுவீடன் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு வெளியே அமர்ந்திருந்த புகைப்படம் அனைவரையும் கவர்ந்தது. இவரின் முயற்சி தற்போது உலக நாடுகள் எங்கும் பரவி உள்ளது. பல நகரங்களில் பருவநிலை மாற்றம் தொடர்பாக போராட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டன. அந்தவகையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 2.5 லட்ச மக்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது. 

இந்தப் பேரணியில் கிரேடா தன்பெர்க் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவர் உரையாற்றினார். அதில், “நாங்கள் எங்களது படிப்பை விட்டுவிட்டு தெருவில் இறங்கி போராட வந்தது மற்றவர்கள் எங்களுடன் செல்ஃபி எடுத்து எங்களை பாராட்டுவதற்கு அல்ல. உலக நாடுகளின் தலைவர்களை பருவநிலை மாற்றம் தொடர்பாக முடிவு எடுக்க வைக்கவே நாங்கள் இதை செய்து வருகிறோம். ஏனென்றால் எங்களுக்கு ஒரு நல்ல பாதுகாப்பான எதிர்காலம் வேண்டும். 

எங்களை பார்த்து பயப்படுவோர்களுக்கு நாங்கள் சொல்வது இது வெரும் தொடக்கமே. நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டாலும் மாற்றம் வரபோவது உறுதி. நாம் என்னதான் படித்தாலும், தரவுகளை ஆராய்ந்து கருத்துகளை கூறினாலும் அதனைக் கேட்க அதிகாரத்தில் இருப்பவர்கள் மறுக்கும் போது அதில் எந்தவித பயனுமில்லை. நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்தாலும் பருவநிலை மாற்றம் தொடர்பாக அவசரநிலை அனைத்து இடங்களிலும் ஒன்றாகதான் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

கிரேடா தன்பெர்க்கின் பருவநிலை மாற்றத்திற்கான போராட்டத்தை பல தலைவர்களும் பாராட்டி வருகின்றனர். இவரை அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா நேரில் சந்தித்து பாராட்டி உள்ளார். அதில், “கிரேடா தன்பெர்க் பூமியின் சிறந்த பாதுகாவலராக உருவெடுத்துள்ளார். அவரது தலைமுறை பருவநிலை மாற்றத்தினால் பாதிப்படையும் என்று நன்கு அறிந்து அவர் இதற்காக போராடி வருகிறார். வருங்காலம் இவரைப் போன்ற இளம் தலைமுறை தலைவர்களால் கட்டமைக்கப் படவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கிரேடா தன்பெர்க் ஐநாவின் இளைஞர் பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். அத்துடன் வரும் திங்கட்கிழமை நடைபெறும் ஐநாவின் பருவநிலை மாநாட்டிலும் கலந்துகொள்ள உள்ளார். 12 மாதங்களுக்கு முன்பு இவர் தொடங்கிய தனி போராட்டம் தற்போது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.