உலகம்

கறுப்பினத்தவர் மீது சரமாரியாக சுட்ட போலீஸ்: அமெரிக்காவில் மீண்டும் போராட்டம்

கறுப்பினத்தவர் மீது சரமாரியாக சுட்ட போலீஸ்: அமெரிக்காவில் மீண்டும் போராட்டம்

Sinekadhara

அமெரிக்காவில் மே 25 அன்றி மினசோட்டா மாகாணத்தில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தில் ஒரு வெள்ளை இன போலீஸ் அதிகாரி தனது முழங்காலை வைத்து நெரித்துகொன்ற சம்பவத்தால் பெரும் போராட்டம் வெடித்தது. அமெரிக்காவையும் தாண்டி உலகம் முழுவதும் ஜார்ஜ் ப்ளாய்டுக்கு நீதிகேட்டு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், அமெரிக்காவில் ஜார்ஜ் ப்ளாய்டு சம்பவத்தை போன்று தற்போது மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மினசோட்டாவின் அண்டை மாகாணமான விஸ்கான்சினில் ஜேக்கப் பிளேக் என்ற ஆப்பிரிக்க -அமெரிக்கர் போலீஸாரால் பலமுறை சுடப்பட்டுள்ளார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அப்பகுதியில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

இதுதொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஜேக்கப் பிளேக், வேனுக்குள் ஏற முயற்சிக்கும்போது, அவரை ஆயுதங்கள் ஏந்தி பின்தொடர்ந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளில் ஒருவர், அவரை நகரவிடாமல் சட்டையை பிடித்துக்கொண்டு, பின்னாலிருந்து சுட முயற்சிக்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏழுமுறை சுடப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறியதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் நடந்த இடத்தில் உடனே மக்கள் கூட்டம் கூடி, நடைப்பாதை தெருவெல்லாம் நிரம்பினர். மேலும் பொதுமக்கள் போலீஸ் வாகனங்களை உதைப்பது போன்ற காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 100 பேர் கொண்ட குழு, கெனோஷா கவுண்டி கட்டிடத்தின் முன்பு கூடி, ‘நீதி இல்லை, அமைதி இல்லை’ என்று கோஷமிட்டது.

இதனால் கெனோஷா கவுண்டி இன்று காலை 7 மணிவரை அவசர ஊரடங்கை அறிவித்தது. துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி ஈடுபட்டதால், விஸ்கான்சின் மாநில ரோந்து மற்றும் கெனோஷா கவுண்டி ஷெரிப்பின் பிரதிநிதிகள் கெனோஷா போலீசாரின் வேண்டுகோளின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இன்று அதிகாலை தி யுஎஸ்ஏ டுடே வெளியிட்ட ஒரு அறிக்கையில், விஸ்கான்சின் DOJ துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை நிர்வாக விடுப்பில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையை மாநில குற்றவியல் புலனாய்வு பிரிவு எடுத்துள்ளது. மேலும் 30 நாட்களுக்குள் சம்பவம் குறித்த அறிக்கையை வழக்குரைஞருக்கு வழங்கவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.