எல்லையை மீறியதுடன் சீன படையினர் மீது இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தியதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன வீரர்களிடையே நேற்றிரவு நடைபெற்ற மோதலில் இந்திய தரப்பில் ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து சீனா உயர்மட்ட மேஜர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய ராணுவ தலைமை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய பாதுபாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் இந்திய பாதுகாப்பு படையினர்தான் நேற்றிரவு இரண்டு முறை கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் எல்லை மீறி நுழைந்ததாகவும், தங்கள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. அதன்பின்னரே சீன வீரர்கள் தரப்பிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியா பிரச்னையை தூண்ட வேண்டாம் என்றும் சீன தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, லடாக் எல்லை தொடர்பாக பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் எல்லையில் இருக்கும் வீரர்கள் எந்தவித அத்துமீறலிலும் ஈடுபடக்கூடாது என தங்கள் வீரர்களை எச்சரித்திருந்ததாக கூறியுள்ள சீனா, இந்தியா-சீனா இடையே நல்லுவரவு நீடிப்பதையே தாங்கள் விரும்பியதாக கூறியுள்ளது. ஆனால் இந்தியா ஒரு தலைபட்சமாக நடந்துகொள்ளக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.