சேலம் மாவட்டம் சங்ககிரி ஆர்.எஸ்.பகுதியில் உள்ள பெரியபனங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோபால் - செல்வமணி தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 45 ஆண்டுகளாக லாரி ஓட்டும் தொழில் செய்து வருகிறார் கோபால்.
இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் கை கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நேரத்தில் அவரால் அவர் வைத்திருந்த லாரியை ஓட்ட முடியாமல் போனது. அப்போது தையல் தொழில் செய்து வந்த அவரது மனைவி செல்வமணிக்கும், தொழிலில் போதிய வருமானம் கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் தனது கணவரின் லாரியை ஓட்டி குடும்பத்திற்கு தேவையான வருமானத்தை ஈட்டலாம் என்று முடிவெடுத்துள்ளார் செல்வமணி.
ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த தொழில்களில், கனரக வாகன ஓட்டுனர் தொழிலும் ஒன்று. அதுவும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பென்றால், யோசித்துப்பாருங்கள்...!
அத்தனை இன்னல்களும் செல்வமணிக்கும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தான் எடுத்த முடிவில் தீர்க்கமாக இருந்துள்ளார். அந்தவகையில் பல்வேறு போராட்டங்களைக் கடந்து லாரி ஓட்டுனர் தொழிலில் தனக்கு இருந்த ஆர்வம் காரணமாக தனது கணவர் உதவியுடன் லாரி ஓட்ட பயிற்சி எடுத்துள்ளார் செல்வமணி. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனி ஒரு பெண்ணாக கனரக வாகன ஓட்டுனருக்கான பேட்ச் லைசென்சை கடந்த 2004 ஆம் ஆண்டே பெற்றுள்ளார் செல்வமணி.
அதனைத் தொடர்ந்து அவரது கணவருடன் இந்தியா முழுவதும் லாரியிலேயே தொடர் பயணங்களை மேற்கொண்டுள்ளார் அவர். ஒருமுறை வண்டி ஏறினால் திரும்பி வருவதற்கு 10 முதல் 15 நாட்கள் வரை ஆகும் என்பதால் லாரியிலேயே அடுப்பு மற்றும் மளிகை சாமான்களை வைத்து சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர் தம்பதியினர்.
இதற்கிடையே லாரி ஓட்ட தொடங்கிய 5 வருடங்களில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் செல்வமணி. இருந்த போதிலும் மனம் தளராமல் உணவு முறை கட்டுப்பாட்டால் அந்த நோயையும் கட்டுப்பாட்டில் வைத்து 15 ஆண்டு காலமாக இந்த கடினமான கனரக வாகன ஓட்டுனர் தொழிலை சிறப்பாக செய்து வருகிறார்.
தற்போது 58 வயதாகி ஓய்வு பெறும் நிலையிலும் ஆர்வத்துடன் லாரி ஓட்டும் பணி செய்து வருகிறார். நம்மிடையே அவர் பேசுகையில், “ஆரம்ப காலங்களில் நீண்ட தூர பயணப்பட்டால், இரவு நேரங்களில் மொழி தெரியாத ஊர்களில் சிக்கிக்கொள்வேன். அப்போது பல்வேறு திருட்டு சம்பவங்களையும் சந்தித்ததுள்ளேன். அதனால் பாதுகாப்பிற்காக எப்போதும் ஒரு கத்தியை வைத்திருப்பேன். பெண் லாரி ஓட்டுனர் என்பதால் சரக்கு ஏற்றும் கம்பெனிகளிலும் போலீசாரிடமும் நல்ல மரியாதை கிடைக்கும்" என தெரிவித்தார்
பெண் லாரி ஓட்டுனராக இருந்து 20 வருடங்கள் நீடித்த போதிலும் வறுமையின் பிடியில் இருந்து அவரால் மீள முயடிவில்லை என்பதே வேதனையின் உச்சம். இருப்பினும் 20 ஆண்டுகளாக லாரி ஓட்டுனராக இருந்து அதன் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு தனது இரு மகன்களையும் நன்றாக படிக்க வைத்துள்ளார். இதில் அவரது பெரிய மகன் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு எம்பிஏ படித்த போதிலும், அவருக்கு சரியான வேலை அமையாததால் தங்களுடன் சேர்ந்து லாரி ஓட்டும் தொழிலையே செய்து வருவதாகவும் அவருக்காவது அவருக்கு படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தால் நிம்மதியடைய முடியும் என்றும் தம்பதியினர் வேதனையுடன் நம்மிடையே தெரிவித்தனர்.
ஆனால், இது தொடர்பாக அவர்களது மூத்த மகன் அருள்முருகன் கூறியபோது... “இந்த லாரி தொழிலை நம்பியே எனது தாயும் தந்தையும் என்னை படிக்க வைத்தனர். குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளாக என் தாய் ஒரு சொந்த லாரியை வைத்து ஓட்டி அதில் கிடைத்த வருமானத்தை வைத்து எங்களை படிக்க வைத்துள்ளார். அவர் ஆசைப்படி இந்த லாரி தொழிலை விரிவுபடுத்துவதே எனது லட்சியம்” என தெரிவித்தார்.