விழுப்புரம் தாய்-மகள் தேர்வு ஆசாத்
பெண்கள்

விழுப்புரம் : ‘அம்மா கணக்கு’ படம் போல் மகளுடன் தாயும் 10-வது தேர்ச்சி!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே மகளுடன் சேர்ந்து தாயும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.

PT WEB

வாழ்க்கையில் கணவனாலும், சமூக சூழல்களாலும் பல தரப்பட்ட கஷ்டங்களை அனுபவிக்கும் பெண்கள் பலரும் தங்களுடைய பிள்ளைகளாவது நன்றாக இருக்க வேண்டும் என்று போராடுவர். இறுதியில் வாழ்க்கையை வென்று காட்டி பிள்ளைகளை உயரவும் வைப்பார்கள். அப்படி ஒரு கதைக்களம் கொண்ட திரைப்படமாக வந்தது தான் ‘அம்மா கணக்கு’ என்ற திரைப்படம். இந்நிலையில் தற்போது அந்த திரைப்படத்தையே மிஞ்சும் அளவு ஒரு சம்பவம் விழுப்புரத்தில் நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியை அடுத்த கீழ்மலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதான கிருஷ்ணவேணி. இருளர் இணத்தைச் சேர்ந்த பெண்ணான கிருஷ்ணவேணி, எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன் பின்னர் திருமணம் முடிந்ததால் பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலை இவருக்கு ஏற்பட்டுள்ளது. குழந்தை திருமணம் நடந்த இவருக்கு, 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

விழுப்புரம் தாய்-மகள் தேர்வு

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர், குடும்பத்தை பிரிந்ததுடன், திருமணத்துக்கு மீறிய உறவில் ஈடுபட்டிருக்கிறார். கணவனை இழந்த கிருஷ்ணவேணி தன் பெற்றோர் இல்லத்தில் மூன்று பெண் குழந்தைகளுடன் தஞ்சம் புகுந்துள்ளார்

பிறந்ததிலிருந்து ஏழ்மை, கணவன் விட்டுவிட்டு சென்றுவிட்டதால் திருமண வாழ்க்கையிலும் ஏமாற்றம் என்று வாழ்க்கையே சுழற்காற்று போல் சுழன்றடிக்க, கிருஷ்ணவேணி ‘எப்படியாவது நாம் அரசு வேலைக்கு சென்று விட வேண்டும்’ என்று முடிவெடுத்துள்ளார். அரசு வேலைகளில் சேரவேண்டும் என்றால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என அறிந்த கிருஷ்ணவேணி, அம்மா கணக்கு திரைப்பட பாணியில் மகளுடன் சேர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முடிவு செய்துள்ளார்.

விழுப்புரம் தாய்-மகள் தேர்வு

எப்படியும் தேர்வில் வென்றுவிடவேண்டும் என்று விடாமுயற்சியோடு படித்த கிருஷ்ணவேணி, மகள் தேர்வெழுதிய அதே நேரத்தில் தனித் தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் தனித்தேர்வில் 206 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் கிருஷ்ணவேணி.

‘அரசு வேலை வாங்க வழிகாட்ட வேண்டும்!’ - கிருஷ்ணவேணி வேண்டுகோள்

3 மகள்களை வளர்த்து நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்பதை மட்டுமே எண்ணி படித்த கிருஷ்ணவேணியின் செயல் அந்த கிராம மக்களை மட்டுமின்றி, அனைத்து தாய்மார்களையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

விழுப்புரம் தாய்-மகள் தேர்வு

முன்னேற வேண்டும் என துடிக்கும் கிருஷ்ணவேணிக்கு முறையான தேர்வு வழிகாட்டுதல்கள் வழங்கி, அவர் அரசுவேலை வாங்க உதவவேண்டும் என்ற கோரிக்கையை அவரும், அவருடைய மகளும் வேண்டுகோளாக வைத்துள்ளனர்.