இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக்கும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தரும் தத்தம் அணிகளுக்காக ஒருவருக்கொருவர் எதிரெதிராக களம்கண்டு விளையாடியவர்கள். அப்படி சேவாக் - அக்தர் இருவரும் களத்தில் கடுமையாக மோதிக்கொண்டாலும், களத்திற்கு வெளியே அவர்கள் பரஸ்பர நட்பை கொண்டிருந்தனர்.
இருவரும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், கிரிக்கெட் குறித்த தங்களது கருத்துக்களை தொடர்ந்து கொடுத்துக்கொண்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இருவரும் அவ்வப்போது சமூக ஊடகங்களில் எதிரெதிர் கருத்துக்களை பகிர்ந்து மோதிக் கொள்வார்கள். சமூக வலைத்தளங்களுக்குத் தீனி போடும் வகையில் ஒருவரையொருவர் கலாய்த்தும் கொள்வார்கள்.
இந்நிலையில் சமீபத்தில், 'ப்ரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்' (Breakfast With Champions) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற வீரேந்திர சேவாக்கிடம், நீங்கள் அக்தரை நிறையமுறை கேலி செய்திருக்கிறீர்கள். இந்த செயலுக்கு பின்னால் ஏதாவது நட்பு உண்டா?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சேவாக், ''எங்கே அன்பு இருக்குமோ, அங்கே கேலியும், நட்பும் இருக்கிறது. அக்தருடன் எனக்கு 2003-04 முதல் ஆழமான நட்பு உண்டு. நாங்கள் இரண்டு முறை பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறோம், அவர்கள் இரண்டு முறை இந்தியா வந்திருக்கிறார்கள்.
நட்பு இருப்பதால்தான் ஒருவரையொருவர் வம்பிழுத்து கொள்கிறோம். முதலில் அவர்தான் இதை தொடங்கிவைத்தார். சேவாக்கின் தலையில் உள்ள முடியைவிட என்னிடம் அதிகளவில் பணம் உள்ளதாககூறி அவர் வம்பிழுத்தார். இப்போது நான் சொல்கிறேன், உங்கள் குறிப்புகளை விட என்னிடம் அதிகமாக தலைமுடி உள்ளன'' என்றார்.
இத்துடன் ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸின் செயல்பாடு குறித்தும் சேவாக் விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் இறுதிப் போட்டியின் கடைசி ஓவரின் போது சி.எஸ்.கே அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அந்த முக்கியமான கடைசி ஓவரை வேகப்பந்து வீச்சாளரான மோகித் சர்மா வீசினார். முதல் 4 பந்துகளில் 1 டாட் பால் உட்பட 3 ரன்களை மட்டுமே அவர் விட்டுக்கொடுத்தார். அதனால் கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்பதால் குஜராத் அணியின் கையே ஓங்கியிருந்தது.
அவ்வேளையில் 5வது பந்தினை மோகித் சர்மா வீசுவதற்கு முன்னர் அவருக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா, பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா அறிவுரை கூறினர். அதுவரை 4 பந்துகளை சரியாக யார்க்கராக வீசிய மோகித், 5வது பந்தை லென்த் பந்தாக வீச... அந்த பந்தினை ஜடேஜா சிக்சருக்கு விளாசினார். பின்னர் கடைசி பந்தினை லெக் சைடில் வைடாக வீச அந்த பந்திலும் ஜடேஜா பவுண்டரி அடித்து சென்னை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
இதைக்குறிப்பிட்டு பேசிய சேவாக், “கடைசி ஓவரின் முதல் 4 பந்துகளை சிறப்பாக யார்க்கர் வீசிய மோகித் சர்மாவை அப்படியே விட்டிருந்தால், மேலும் 2 யார்க்கரை வீசி அவர் வெற்றிபெற்று கொடுத்திருப்பார். தேவையில்லாமல் 5வது பந்திற்கு முன்னதாக ஆலோசனை வழங்குகிறேன் என்ற பெயரில் மோகித் சர்மாவின் தெளிவான மனநிலையை குழப்பிவிட்டனர்” என்று விமர்சித்துள்ளார்.
மேலும் சேவாக், “துல்லியமான யார்க்கர் பந்துகள் மூலம் மோகித் சர்மா தனது வேலையை மிக சரியாகவே செய்து வந்தார். அப்படி இருக்கையில் எதற்காக கேப்டன் ஹர்திக் பாண்டியா, அவரிடம் சென்று பேச வேண்டும்? பந்துவீசும் பந்துவீச்சாளருக்கு 2 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் எதிரணி வெற்றி பெற்றுவிடும் என்பது தெரியும் தானே! அவர் தனது வேலையை செய்து கொடுக்க மாட்டாரா? பின் எதற்காக ஒவ்வொரு பந்திற்கும் அவரிடம் சென்று எதாவது பேசி, அவரது நேரத்தையும், கவனத்தையும் வீணடிக்க வேண்டும்?
கேப்டனாக ஒரு அக்கறையில், பந்துவீச்சாளருக்கு எதாவது தேவையா, அவரது பந்துவீச்சிற்கு ஏற்றவாறு பீல்டிங் செட் செய்ய வேண்டுமா என கேட்பதற்காக கூட ஹர்திக் பாண்டியா மோகித் சர்மாவிடம் பேசியிருக்கலாம். ஆனால் நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் நிச்சயமாக மோகித் சர்மாவை தொந்தரவு செய்திருக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.