Virat Kohli & Rohit Sharma File Image
Cricket

ஆப்கானிஸ்தான் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு ஓய்வு?

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய இரண்டாம் தர அணியே ஆப்கானிஸ்தான் தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

Justindurai S

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி அடுத்தடுத்து பல தொடர்களில் பங்கேற்க இருக்கிறது. அதில் முதலில் வருகிற ஜூன் 7 முதல் 11ஆம் தேதி வரை இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Team India

பிறகு ஜூன் 20 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்கவிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்கிறது இந்திய அணி.

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் உடனான தொடர் மற்றும் வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஆப்கானிஸ்தான் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் சிலருக்கு ஓய்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. அப்படி நடந்தால், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய இரண்டாம் தர அணியே ஆப்கானிஸ்தான் தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

Team India

பிசிசிஐயின் அழைப்பின் பேரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மிர்வைஸ் அஷ்ரஃப், ஐபிஎல் இறுதிப் போட்டியை காண்பதற்காக இந்தியா வந்துள்ளார். இறுதிப்போட்டிக்கு பின் ஆசிய கோப்பை தொடரை நடத்துவது தொடர்பான கலந்தாலோசனை கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் தொடருக்கான அட்டவணையும் இறுதி செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு இந்திய அணிக்கு ஆசியக் கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை போன்ற முக்கியமான தொடர்கள் வரவிருக்கும் நிலையில் மூத்த வீரர்களுக்கு காயம் ஏற்படாமல் இருக்க அவர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பது பிசிசிஐயின் முதல் முன்னுரிமையாக இருக்கும் எனத் தெரிகிறது.

Ravindra Jadeja

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ரா உள்ளிட்டோர் காயம் காரணமாக விலகியதால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.