police station pt desk
வீடியோ ஸ்டோரி

ரயிலில் அடிபட்டு இறந்தவரை தாயென நினைத்து அடக்கம் செய்த மகன் - தாய் உயிருடன் வந்ததால் பரபரப்பு

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உடல் சிதறிய நிலையில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை தனது தாயென நினைத்து அடக்கம் செய்த மகன். ஆனால் தாய் உயிருடன் திரும்பி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

webteam

திருவள்ளூர் அடுத்த சேலைகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கம்மாள் (66). இவருக்கு காந்தி, வெங்கடேசன், சரவணன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் காந்தி மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் சென்னையிலும், சரவணன் சேலைகண்டிகை கிராமத்திலும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொக்கம்மாளுக்கும் எதிர்வீட்டுக் காரர்களுக்கும் ஏற்பட்ட பிரச்னையில் எதிர் தரப்பினர் சொக்கம்மாளை அடித்து விட்டதாக கூறப்படுகிறது.

house

இதனால் சொக்கம்மாள் கோபித்துக் கொண்டு சென்னையில் உள்ள மகன் வெங்கடேசன் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கும் புட்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் சிதறி மூதாட்டி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் துண்டறிக்கை மூலம் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதனை கண்ட சரவணன், சென்னையில் உள்ள அண்ணன் காந்தி, வெங்கடேசன் ஆகியோருக்கு தகவல் சொல்ல செல்போனி மூலம் முயன்றுள்ளார். ஆனால், இருவரும் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர் தமது தாய் தான் என கருதிய சரவணன், ரயில்வே போலீசாரிடம் உடலை பெற்று சேலைகண்டிகை சுடுகாட்டில் நல்லடக்கம் செய்துள்ளார்.

train

இந்நிலையில், சொக்கம்மாள் சேலைகண்டிகை கிராமத்தில் உள்ள சரவணன் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன், திருவள்ளூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அடக்கம் செய்த உடலை தோண்டியெடுத்தனர் பின்னர் உடலில் இருந்த மச்சம் மற்றும் கையில் பச்சை குத்தியிருப்பதைப் பார்த்து இது காணாமல் போனதாக கூறப்பட்ட செங்குன்றத்தைச் சேர்ந்த சகுந்தலா தேவி தான் என அவரது உறவினர்கள் உறுதி செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.