ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் ஆகியவை வனப்பகுதியை ஆக்கிரமிக்கவில்லை என கோவை கோட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையத்தால் வனப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அதுகுறித்த தகவல்களை அளிக்குமாறு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த தினேஷ்ராஜா என்பவர் கேட்டிருந்தார். இதற்கு கோவை கோட்ட பொது தகவல் அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் பதிலளித்துள்ளார். அந்த பதில் கடிதத்தில், ஈஷா யோகா மையம் கோவை வன கோட்டத்திற்கு கீழ் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையத்தால் வனப்பகுதியில் எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யப்படவில்லை என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ஈஷா யோகா மையம், ஈஷா அறக்கட்டளையின் கட்டுமானங்கள் வனப்பகுதியில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈஷா யோகா மையம் அருகே யானைகள் வழித்தடம் உள்ளதா என்ற கேள்விக்கு, கோவை வனக் கோட்டத்தில் வரையறுக்கப்பட்ட யானைகள் வழித்தடம் இல்லை என பதிலளிக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஈஷா யோகா மையம் அமைந்திருப்பதாகவும், யானை வழித்தடங்கள் மறிக்கப்பட்டிருப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், ஆர்டிஐ மூலம் அளிக்கப்பட்டுள்ள இந்தத் தகவல்கள் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.