ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள செயற்களத்தூர் கிராமத்தை கலைவாணன், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் சிவில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார், இந்நிலையில், கலைவாணனுக்கும் பரமக்குடி அருகே உள்ள அருங்குளம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தவல்லி என்ற பெண்ணுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் இன்று நடைபெற்றது.
இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த தனது முதலாளி ஸ்டீபன் லீகுவாவை திருமணத்திற்கு வருகை தந்து நடத்தி வைக்க வேண்டும் என கலைவாணன் கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து இன்று பார்த்திபனூரில் நடைபெற்ற கலைவாணன் திருமணத்திற்கு, சிங்கப்பூரில் இருந்து முதலாளி ஸ்டீபன் லீகுவான் வருகை தந்தார். பின் அவரை வரவேற்கும் விதமாக ட்ரம் செட் வைத்தும் பட்டாசு வெடித்தும் மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் தமிழர்களின் பாரம்பரியபடி உற்சாகமாக வரவேற்ப்பளித்தனர்.
பின்னர், திருமாங்கல்யத்தை தனது கையால் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார் அந்த முதலாளி. ”தமிழர்களின் கலாச்சாரம், உபசரிப்பு இதுவரை நேரில் பார்த்ததில்லை; வித்தியாசமாகவும் வியப்பாகவும் உள்ளது” என ஸ்டீபன் லீகுவான் பாராட்டினார்.