வீடியோ ஸ்டோரி

கேரள அரசுப் பேருந்தில் சோதனை - பயணியிடமிருந்து ரூ.70 லட்சம் பறிமுதல்

கேரள அரசுப் பேருந்தில் சோதனை - பயணியிடமிருந்து ரூ.70 லட்சம் பறிமுதல்

Sinekadhara

கன்னியாகுமரி எல்லைப்பகுதியில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையின்போது, பேருந்து பயணியிடமிருந்து 70 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் தமிழக - கேரள எல்லையான படந்தாலுமூடு பகுதியில் இரு மாநில மதுவிலக்கு காவல்துறையினர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற கேரள மாநில அரசுப் பேருந்தை சோதனையிட்டனர். சோதனையின்போது, பேருந்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் பையுடன் இருந்த நபரை சோதித்தபோது அவரது பையில் கட்டு கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காகிதத்தில் சுற்றப்பட்ட கட்டுகளில் 70 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு செல்லப்பட்டதால், அதை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த நபரை களியக்காவிளை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தப்பட்டது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு தமிழக கேரள எல்லைப்பகுதிகளில் வரும் நாட்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளதாக இரு மாநில காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர்.