காவனூர் - கள்ளிப்பாடி இடையே வெள்ளாற்றில் மேல்மட்ட பாலம் அமைத்துத் தரும்படி 13 கிராம மக்கள் முப்பது ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆபத்துக் காலத்திலும், அவசர தேவைகளுக்கும் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்க வேண்டிய அவலம் நீங்குமா என காத்திருக்கிறார்கள்.
கடலூர் மாவட்டம் கள்ளிப்பாடி கிராமத்தின் வழியாக ஒடும் வெள்ளாற்றின் மறுகரையில் உள்ள காவனூர், தேவங்குடி, சக்கரமங்கலம் என 13 சிற்றூர்கள் உள்ளன. அந்த சிற்றூர்களில் வாழும் மக்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், பள்ளி - கல்லூரி மற்றும், விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய என அனைத்திற்கும் ஆற்றைக் கடந்து ஸ்ரீமுஷ்ணத்திற்கு செல்ல வேண்டும்.
ஆற்றைக் கடந்து செல்வது அவ்வளவு எளிதில்லை என்பதால், 30 ஆண்டுகளாக பாலம் அமைக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தான், 4 ஆண்டுகளுக்கு முன்னர், அதிமுக ஆட்சியில், வெள்ளாற்றில் பாலம் கட்ட 19 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. மதிப்பீடு பணிகள் முடிந்து மண் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஏனோ திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
பாலம் எழும் என்று காத்திருந்த கிராம மக்கள், அது நடக்காமல் போனதால், தங்களது சொந்தச் செலவில் வெள்ளாற்றில் தற்காலிக மண் பாதை அமைத்து பயன்படுத்தி வந்தனர். ஆனால், அண்மையில் பெய்த பெருமழை அந்த மண் பாதையையும் தூர்த்து விட்டது.