தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், மழை விட்டு விட்டு பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இந்த மாதத்தில் மட்டும் 100 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. நகர் பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியில் கூவம் ஆற்றை ஒட்டியுள்ள நியூ காலனியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இப்பகுதியில் 250க்கும் அதிகமான வீடுகள் உள்ள நிலையில், அங்கு வசிக்கும் பலர் முகாம்களுக்கு சென்றுள்ளனர்.
ஏரிகள் நிரம்பி அதன் உபரி நீர் பள்ளிக்கரணை மேற்கு அண்ணாநகரில் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. அத்தியாவசிய தேவைக்குக்கூட வெளியே சென்று வர மக்கள் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர். பள்ளிக்கரணை சாய்பாலாஜி நகரில் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்புத்துறையினர் ரப்பர் படகு மூலம் மீட்டனர்.
செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒரு வாரமாக வேலைக்குச் செல்லமுடியாத நிலை இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சென்னை புறகர் பகுதியான ஊரப்பாக்கத்தில், ஏரி நீர் ஊருக்குள் புகுந்ததால் செல்வராஜ் நகர், எம்ஜி நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளம் சூழ்ந்துள்ளது.