கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தமிழகப் பெண்ணின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் எர்ரப்பட்டியைச் சேர்ந்த பத்மா உள்ளிட்ட இரண்டு பெண்கள் கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டனர். இந்த நிலையில் பத்மாவின் உடலை அடையாளம் காட்டுவதற்காக அவரது மகன்கள் உள்ளிட்ட உறவினர்கள் கேரளா சென்றுள்ளனர். தோண்டி எடுக்கப்பட்ட பத்மாவின் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி அடையாளம் காண முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக பத்மா குடும்பத்தினரிடம் இருந்து மரபணு மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. ஆனால் பத்மாவின் சடலத்திலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 10 நாள்களாக கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் தங்கியிருக்கும் பத்மாவின் உறவினர்கள், அவரது உடலை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டுவர தமிழக அரசு உதவி செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.