கர்நாடகா மாநிலத்தில், 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு, அடுத்த மாதம் (மே 2023) 10ஆம் தேதி, ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக பாரதிய ஜனதா தேர்தல் பொறுப்பாளரும், அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவருமான அண்ணாமலை மீது, காவுப் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வினய் குமார் சொரகே குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
காவுப் தொகுதிக்கு அண்ணாமலை ஹெலிகாப்டரில் வந்தபோது, வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக மூட்டை மூட்டையாக பணத்தை கொண்டு வந்தததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாகவும், பாரதிய ஜனதாவின் 'பண அரசியல்', இனி கர்நாடக மக்களிடம் எடுபடாது என்றும் வினய் குமார் சொரகே தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள அண்ணாமலை, பரப்புரைக்காக பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டி இருப்பதால் ஹெலிகாப்டரில் பயணிப்பதாக கூறினார். வினய் குமார் சொரகே விரக்தியில் இருப்பதால் இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.