வீடியோ ஸ்டோரி

பெற்றோரை இழந்து பரிதவிக்கும் 4 சிறுவர்கள் - தம்பிகளுக்கு தாய்-தந்தையாக மாறிய மூத்தவன்

பெற்றோரை இழந்து பரிதவிக்கும் 4 சிறுவர்கள் - தம்பிகளுக்கு தாய்-தந்தையாக மாறிய மூத்தவன்

JustinDurai

புதுக்கோட்டையில் தாய் - தந்தையை இழந்து ஆதரவின்றி தவிக்கும் 4 சிறுவர்கள், சரியான உணவின்றியும், கல்வி இன்றியும் பரிதவித்து வருகிறார்கள். உதவிக் கோரி மாவட்ட ஆட்சியரையும் அவர்கள் நாடியுள்ளனர்.

வெறும் கால்களோடு ஆட்சியர் அலுவலகம் சென்று கோரிக்கை மனு கட்டியணைத்து அன்பு செலுத்த தாயும் இல்லை. கேட்பதையெல்லாம் வாங்கி கொடுத்து மகிழ்விக்க தந்தையும் இல்லை. விளையாட்டு பருவம் மாறாத 3 சிறுவர்களுக்கும் தாயாகவும், தந்தையாகவும் இருந்து வருகிறார் இவர்களது அண்ணன்.

அண்ணன் அரிகரனுக்கோ பெரிய வயதெல்லாம் இல்லை. 16 வயதிலேயே குடும்ப பாரத்தை சுமக்க தொடங்கிவிட்டார். பாட்டிக்கு உதவியாக அவ்வப்போது கூலி வேலைக்கு செல்லும் அரிகரன், படிப்பை தொடர்வதா? அல்லது தம்பிகளை கவனிக்க வேலைக்கு செல்வதா? என பிஞ்சு வயதிலேயே பல சிந்தனைகளில் மூழ்கிவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள செய்யானம் கிராமத்தை சேர்ந்த அரிகரன், அஜய், அஜித்குமார் மற்றும் அகிலன் என்ற சிறுவர்கள், 5 ஆண்டுகளுக்கு முன் வரை தாய் - தந்தையுடன் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர். உடல்நலக் குறைவால் தாய் வனிதா உயிரிழக்க, ஆதரவாக இருந்த தந்தை சந்திரசேகரனும் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்துள்ளார். இதனால், 4 சிறுவர்களும், பாட்டியின் வீட்டில் சரியான உணவு, உடையின்றி தவித்து வருகிறார்கள். சுமார் 70 வயதான புஷ்பா பாட்டி வீட்டு வேலைக்கு சென்று 4 சிறுவர்களையும் பராமரித்து வருகிறார்.

சிறுவர்களின் தந்தையின் நண்பர்கள், அவர்கள் நான்கு பேரையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து மனு அளிக்க உதவி செய்தனர். காலணி கூட இல்லாத நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற சிறுவர்களுக்கு உதவி செய்வதாக ஆட்சியர் கவிதா ராமு உறுதி அளித்துள்ளார். எதிர்காலம் காக்கப்படும் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஏக்கத்துடன் சிறுவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.