வீடியோ ஸ்டோரி

ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் வீட்டில் உள்ள பணம், நகைகளை திருடிய சிறுவன்

ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் வீட்டில் உள்ள பணம், நகைகளை திருடிய சிறுவன்

கலிலுல்லா

ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் வீட்டில் இருந்த பணம், நகையுடன் 15 வயது சிறுவன் நேபாளத்திற்கு தப்ப முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தைகளை ஆன்லைன் மோகத்தில் இருந்து மீட்பது எப்படி? அதற்கான தீர்வுகள் என்ன?

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 15 வயது சிறுவன், ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி எந்நேரமும் அதில் மூழ்கியிருந்தான். பெற்றோர் தட்டிக் கேட்டு கண்டித்த நிலையில், விரக்தி அடைந்த சிறுவன், வீட்டில் இருந்த 213 சவரன் நகை, 33 லட்சம் ரூபாய் பணத்துடன், நேபாளத்திற்கு செல்ல திட்டமிட்டு தாம்பரத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளான்.

மகன் காணாமல் போனதை அடுத்து, காவல்துறை உதவியை பெற்றோர் நாட, தனிப்படை அமைத்து தேடிய போலீசார், செல்போன் எண்ணை வைத்து சிறுவனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர். விசாரணையில், ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்ததால், நேபாளத்திற்கு சென்று விடலாம் எனக் கருதி பணத்துடன் வந்ததாக தெரிவித்திருக்கிறான் அந்த சிறுவன்.

குடும்பத்தின் எதிர்கால செலவுகளுக்காக வைத்திருந்த மொத்த பணத்தையும், ஆன்லைன் விளையாட்டுக்காக சிறுவன் எடுத்து வந்ததற்கு என்ன காரணம்? அந்த அளவிற்கு அவன் மனதை ஆன்லைன் விளையாட்டுகள் சீரழிக்கிறதா? என்ற கேள்வியை மனநல மருத்துவர் சிவபாலனிடம் வைத்தோம். குழந்தைகளின் பழக்கங்களை ஆரம்பம் முதலே கவனித்தால் இத்தகைய சீரழிவுகளை நிச்சயம் தடுக்க முடியும் என தெரிவித்தார் மருத்துவர் சிவபாலன்.

செல்ஃபோனுடன் அதிக நேரம் விரயம் செய்யும்போதே, குழந்தைகளை தடுத்து நிறுத்தினால், ஆன்லைன் விளையாட்டுகளில் அடிமையாவதில் இருந்து தடுக்க முடியும் என்றும் தெரிவித்தார் மருத்துவர் சிவபாலன். சக குழந்தைகளுடன் விளையாடுவது, குடும்பத்தினருடன் பேசுவதற்கு நேரம் செலவிடுவது என பாரம்பரிய பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தாலே இத்தகைய பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்க முடியும்.