இலங்கை கடற்படையினர் கற்களை கொண்டு தாக்கியதில் மீனவர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அந்தோணி பிரசாத் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற செல்வம், சேது, சசி, ராமமூர்த்தி ஆகிய நான்கு மீனவர்களை நோக்கி இலங்கை கடற்படையினர் கற்களைக் கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில், பாம்பன் காமராஜர் பகுதியைச் சேர்ந்த விசைப்படகின் ஓட்டுநர் செல்வத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து சக மீனவர்கள் அவரை மீட்டு மண்டபம் கடற்கரைக்கு கொண்டு வந்து அதன் பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
மேலும் இலங்கை கடற்படையினர் கற்களை கொண்டு எரிந்து விரட்டி அடித்ததில் ஒரு படகிற்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து தொடர்ச்சியாக இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் உள்ள மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.