வீடியோ ஸ்டோரி

ரஜினி பாணியில் வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர் : பரப்புரை சுவாரஸ்யங்கள்!

ரஜினி பாணியில் வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர் : பரப்புரை சுவாரஸ்யங்கள்!

EllusamyKarthik

தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள். பரப்புரைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் அனைத்து தொகுதிகளிலும் வெயிலையே மிஞ்சும் வகையில் பிரசாரம் அனல் பறக்கிறது. வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள், வாக்குக்கு பணம் கொடுக்கும் ஆதரவாளர்கள் என இன்றைய தினமும் தேர்தல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லை.

திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு, வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பல்வேறு பகுதிகளில் ஆடல் பாடலுடன் எ.வ.வேலுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதுகுளத்தூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி-க்கு சிறுவர்கள் குத்தாட்டம் போட்டு வரவேற்பு அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் காந்திராஜன், "இப்ப இல்லைனா இனி எப்பவும் இல்லை" என்ற நடிகர் ரஜினிகாந்தின் டையலாக்கை பேசி வாக்கு சேகரித்து வருகிறார்.

விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் பழனியப்பன், ஜல்லிகட்டு காளைகளுக்கு மாலை மற்றும் துண்டு அணிவித்து வணங்கினார். சின்னத்திரை நடிகரும் திரைப்பட இயக்குனருமான போஸ் வெங்கட் பழனியப்பனுக்கு ஆதரவு திரட்டினார்.

மடத்துக்குளம் தொகுதியில் முன்னாள் அமைச்சரும் அமமுக வேட்பாளருமான சி.சண்முகவேலு வாக்கு சேகரித்தார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கைக் குழந்தைகளுடன் ஏராளமான பெண்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

வாணியம்பாடி தொகுதியில் பள்ளிவாசலிலிருந்து தொழுகை முடிந்து வந்தவர்களிடம் அதிமுக-வினரும், திமுக கூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சியினரை மட்டும் காவல்துறையினர் கலைந்து செல்ல வற்புறுத்தினர். காவல்துறையின் ஒருதலைபட்ச நடவடிக்கையை கண்டித்து, மாநில சிறுபான்மைத் துறை தலைவர் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பள்ளிவாசல்கள் முன் நின்று வாக்கு சேகரித்த அமைச்சர் செங்கோட்டையன் வெற்றி பெற இஸ்லாமியர்கள், வழிபாடு நடத்தினர்.

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அதிமுகவினரை, திமுகவினர் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.