வீடியோ ஸ்டோரி

வெறும் கைகளால் கழிவுகளை அகற்றும் தூய்மை பணியாளர்கள்! இன்னும் எத்தனை நாள் இந்த கொடுமை!

வெறும் கைகளால் கழிவுகளை அகற்றும் தூய்மை பணியாளர்கள்! இன்னும் எத்தனை நாள் இந்த கொடுமை!

webteam

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் கால்வாய்களில் தூய்மைப் பணியாளர்களே நேரடியாக இறங்கி எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மனித கழிவுகளை அகற்றும் பணிகளைச் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பூவிருந்தவல்லியில் இருந்து மழைநீர், கூவம் நதியை சென்றடைய கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீர் வெளியேறாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இந்த கால்வாயில் அடைப்பை அகற்றி வரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

பொதுவாக கால்வாயில் அடைப்பை சரி செய்ய இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது விதி. ஆனால், பூவிருந்தவல்லி நகராட்சி அதிகாரிகளின் அலட்சியப்போக்கால், சாக்கடைக் கால்வாய்களில் இன்றும் தூய்மைப் பணியாளர்களே இறங்கி, அடைப்புகளை சரி செய்வதும், மனித கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அவலமும் தொடர்கிறது.

பொதுவாக சாக்கடைகளில் மனிதர்களை இறக்கி, பணியில் ஈடுபடுத்துவது அப்பட்டமான சட்ட விரோதமான செயல் என்பதோடு, மனித உரிமை மீறல் குற்றமுமாகும். அதேபோல இந்த கால்வாயில் தனியார் கழிவுநீர் லாரிகள் நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறை மனிதக் கழிவுகளை கொட்டிச் செல்வதாக கூறப்படுகிறது. நிலை இப்படி இருக்க எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் துய்மை பணியாளர்களை கால்வாயில் இறங்கி அடைப்பை சரிசெய்வதால் நோய்த் தொற்று ஏற்படுவதுடன், உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

இது குறித்து பூவிருந்தவல்லி நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறிப்பிட்ட இடத்தில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான பகுதி என்பதால் அவர்களே அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தாமதமானதால், நகராட்சியில் ஒப்பந்த துய்மையாளர்களை கொண்டு அடைப்பை சரி செய்ததாக விளக்கம் அளித்துள்ளனர்,

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி செய்வது குறித்து தெரிய வந்ததை அடுத்து உடனடியாக வேலைகளை நிறுத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.