டிரெண்டிங்

உயிருக்குப் போராடும் இளைஞர் - கொரோனாவால் சிகிச்சைக்கு மறுப்பதாக குற்றச்சாட்டு

உயிருக்குப் போராடும் இளைஞர் - கொரோனாவால் சிகிச்சைக்கு மறுப்பதாக குற்றச்சாட்டு

webteam

மதுரை அருகே முதுகு தண்டுவடம் பாதித்து, சிறுநீரக தொற்று ஏற்பட்டு உயிருக்கு போராடும் இளைஞருக்கு கொரோனாவை காரணம் காட்டி சிகிச்சை அளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரையை அடுத்த சமயநல்லூரை சேர்ந்த 24 வயது இளைஞர் சசிகுமார், 3 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கியதில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது. இதனால் இவரது இடுப்பிற்கு கீழ் உள்ள அனைத்து உடல் உறுப்புகளும் செயலிழந்த நிலையில் செயற்கை சிறுநீர் குழாய் மூலமே சிறுநீர் கழித்து வருகிறார். வழக்கமாக 20 முதல் 25 நாட்களுக்கு ஒருமுறை சிறுநீர் குழாய் மாற்றப்படும் நிலையில் கடந்த 3 மாதங்களாக கொரோனோ பொது முடக்கம் காரணமாக மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழலில் சசிகுமாருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது.

கடந்த 26ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் சசிகுமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுநீரக தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்து சிறுநீரக குழாய் அமைக்க வேண்டியிருக்கும் எனவும், ஆனால் தற்போது கொரோனோ சிகிச்சைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் இதுபோன்ற அறுவை சிகிச்சையை தற்காலிகமாக செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். கொரோனோ பாதிப்பு கட்டுக்குள் வந்தவுடன் அறுவை சிகிச்சை செய்யலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உடல் பாதிப்புகளால் வீட்டில் முடங்கியுள்ள மகனை பராமரித்துவிட்டு கிடைக்கும் நேரத்தில் கூலி வேலை செய்தும், சமையல் வேலை செய்தும் வயிற்றுப் பசியை போக்கி வந்த நிலையில், கொரோனோ பொது முடக்கம் காரணமாக வேலையின்றி தவித்து வருவதாக கூறுகிறார்கள் சசிகுமாரின் வயதான பெற்றோர். சசிகுமாரின் நிலை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வினய்யின் கவனத்திற்கு புதிய தலைமுறை கொண்டு சென்றது. அப்போது உடனடியாக சசிகுமாருக்கு சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் வினய் உறுதி அளித்துள்ளார்.