பிரதமர் மோடியும் அவரது நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தையே சிதைத்துவிட்டார்கள் என்று வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
மோடியின் வருகைக்கு பின் ஓரங்கட்டப்பட்ட மூத்த தலைவர்களில் யஷ்வந்த் சின்ஹாவும் ஒருவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் எழுதியுள்ள கட்டுரையில், இந்தியாவில் வறுமை அதன் கடைசி நிலைக்கு வந்துவிட்டது என்கிறார் பிரதமர் மோடி. அந்தப் பொய்யைக் காப்பாற்ற ஓவர் டைம் வேலை பார்க்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. அவர் இந்தியப் பொருளாதாரத்தைச் சிதைத்துவிட்டார். இந்த உண்மையை இனியும் பேசாவிட்டால் தன்னுடைய தேசியக் கடமையிலிருந்து அவர் தவறியவராகிவிடுவார். என்னதான் ஜேட்லி ஒரு சூப்பர் மேனாகவே இருந்தாலும் நிதித்துறைக்கு அதிக கவனமும் நேரமும் தேவை. இந்தியப் பொருளாதாரத்தை வலுவாக கட்டமைக்க கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பை ஜேட்லி தவறவிட்டுவிட்டார்.
ஜேட்லி பதவிக்கு வந்தபோது கச்சா எண்ணெய் விலை மிக மந்தமாக இருந்தது. அதை சரியாகப் பயன்படுத்தாமல் லட்சக்கணக்கான கோடி ரூபாயை வீணாக்கிவிட்டார். இந்திய பொருளாதாரம் இப்போது தவறான நிலையிலிருந்து மோசமான நிலைக்குப் போய்விட்டது. அதற்கு பணமதிப்பிழப்பு ஒரு முக்கிய காரணம். மோடியின் இந்த தவறான திட்டத்துக்கு அருண் ஜேட்லி முழு உடந்தையாக இருந்திருக்கிறார் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.