தன்னுடைய விவாகரத்து பார்ட்டியில் டாப்லெஸ் வெயிட்டராக பணியமர்த்தப்பட்ட நபரையே காதலித்து கரம் பிடித்திருக்கிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் மனிதநேய ஆசிரியராக இருப்பவர் கேப்ரியலா. 29 வயதான இவரின் 10 ஆண்டு திருமண வாழ்வு கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தின் போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது.
விவாகரத்து கிடைத்ததை அடுத்து நண்பர்களின் பரிந்துரையின் பேரில் கேப்ரியலா பார்ட்டி வைத்திருக்கிறார். அந்த பார்ட்டிக்கு மேலாடையின்றி வெயிட்டர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
அதில், 28 வயதான ஜான் லாண்டோல்ஃபி என்ற இளைஞரும் டாப்லெஸ் வெயிட்டராக இருந்திருக்கிறார். பார்ட்டி முடிந்த மறுநாள், கேப்ரியலா எப்படி இருக்கிறார் என்பதை அறிய ஜான் அவருக்கு மெசேஜ் செய்திருக்கிறார்.
இதனையடுத்து மறுநாள் இரவு இருவரும் சந்தித்த போது ஜானின் ஃபிட்டான உடல் தோற்றத்தை கண்டு கேபி சற்று அசந்து போயிருக்கிறார். பின்னர் இருவரும் தொடர்ந்து நட்புறவில் இருந்து வந்த நிலையில் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் கேப்ரியாலாவிடம் ஜான் தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதன் பிறகு இருவரும் நட்புறவில் இருந்து காதல் உறவுக்கு சென்றதால் கடந்த 2020 நவம்பர் மாதம் திருமணம் செய்துக்கொண்ட இந்த ஜோடிக்கு 2021ம் ஆண்டு ஜூலையில் மேட்டியோ என்ற மகனும் பிறந்திருக்கிறார்.
தனது விவாகரத்து பார்ட்டியில் வேலை செய்தவரையே திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வருவதை கேப்ரியலா காதல் பொங்க வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதில், “என்னுடைய டைவர்ஸ் பார்ட்டியில் வேலை பார்த்த ஒரு டாப்லெஸ் வெயிட்டருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து திருமணமும் செய்துக்கொள்வேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.
இந்த அளவுக்கு சிறப்பான நபராக இருப்பார் என முன்பு நான் அறிந்திருக்கவில்லை. ஏதோ என் வாழ்க்கையில் பெரிய சூறாவளி அடித்தது போல இருக்கிறது. என்னுடைய வெயிட்டராக அவர் இருந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
முதலில் ஜானை பார்க்கும் போது அவர் தனது தோற்றத்துக்கு மெனக்கெடுபவர் என்று நினைத்தேன். ஆனால் ரொம்ப அழகான குடும்பத்தை இப்போது பெற்றிருக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.
கேப்ரியலா பற்றி ஜான் கூறுகையில், “கேபியை நான் முதலில் பார்த்தபோது அவர் மிகவும் கூலாக இருந்தார். அதனை அவரைப் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினேன். நல்ல நட்பைதான் எதிர்ப்பார்த்தேன். மனைவியாக இருப்பார் என நினைக்கவில்லை.
எங்கள் உறவை நான் சூறாவளியாக கருதவில்லை. இது வாழ்நாளுக்கும் நீடித்து இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.