டிரெண்டிங்

முதல் திருமண நாளை கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை

முதல் திருமண நாளை கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை

kaleelrahman

மதுரவாயலில் திருமண நாளை கொண்டாடுவதில் தகராறு. முதல் திருமண நாளில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல், கங்கா நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற பெண்ணோடு திருமணம் நடைபெற்ற நிலையில் நேற்று இவர்களுக்கு முதலாம் ஆண்டு திருமண நாள் வந்தது. இந்த திருமண நாளை தனது தாய் வீட்டிற்கு சென்று கொண்டாடலாம் என சுரேஷ் கூறியுள்ளார்.

அதற்கு சந்தியா திருமணமாகி ஓராண்டு முடிவடைந்த நிலையில் இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்றும், தற்போது போதிய வருமானம் இல்லாததால் தேவை இல்லாமல் வீண் செலவு செய்து திருமண நாளை கொண்டாட வேண்டாம் என கூறி உள்ளார்.


இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சுரேஷ் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். சந்தியா வீட்டில் இருந்துள்ளார். பின்னர் மாலையில் சுரேஷ் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டபோது, சந்தியா செல்போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து அவரது தாயை வீட்டிற்குச் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார்.

சுரேஷின் தாய் சென்று பார்த்தபோது சந்தியா வீட்டில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று சந்தியாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சந்தியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்துபோன சந்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி ஓராண்டு ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் திருமண நாளை கொண்டாடுவதில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

==

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)