டிரெண்டிங்

வெற்றிப் பாதைக்கு திரும்பப் போவது யார்? ராஜஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது கொல்கத்தா!

வெற்றிப் பாதைக்கு திரும்பப் போவது யார்? ராஜஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது கொல்கத்தா!

ச. முத்துகிருஷ்ணன்

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தோல்வியில் இருந்து வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

ஐபிஎல் 2022 சீசனின் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 2 தோல்விகளை பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. துவக்க ஆட்டங்களில் மிக அபாரமாக ஆடிய ராஜஸ்தான், அதே உத்வேகத்துடன் அடுத்தடுத்த ஆட்டங்களில் ஆடத் தவறியது.

ஜோஸ் பட்லர், ஹெட்மேயர் பேட்டிங்கில் வலுசேர்க்க, கேப்டன் சாம்சன், தேவ்தத் படிக்கல் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். யஸ்வேந்திர சஹால், ட்ரெண்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தி பவுலிங்கில் வலுசேர்க்கின்றனர். குஜராத் அணிக்கு 37 ரன்களில் படுதோல்வியுற்ற அந்த அணி, மீண்டும் வெற்றிப் பயணத்திற்கு திரும்பும் முனைப்பில் களமிறங்குகிறது.

மறுபக்கம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 வெற்றி, 3 தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணியை போலவே துவக்க ஆட்டங்களில் வெற்றிகளை வாரிக் குவித்த கொல்கத்தா, கடைசி ஆட்டங்களில் மிக மோசமாக தோல்வியை தழுவி அதிர்ச்சி அளித்தது. டெல்லி, ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக தொடர் தோல்விகளை சந்தித்த அந்த அணி, தற்போது ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கொல்கத்தா அணியில் ஆண்ட்ரூ ரஸல், ஸ்ரேயாஸ் அய்யர், பேட் கம்மின்ஸ், நிதிஷ் ரானா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். ஆனால் நிலைத்த ஆட்டத்தை இவர்கள் வெளிப்படுத்த தவறுவது அணிக்கு சிக்கலாக மாறுகிறது. துவக்க ஆட்டங்களில் ஜொலித்த உமேஷ் யாதவ் அடுத்தடுத்த ஆட்டங்களில் சோபிக்கத் தவறியது தொடர் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. பவுலிங்கில் சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி இன்னும் சிறப்பாக பந்துவீசும் நெருக்கடியில் உள்ளனர்.

இரு அணிகளும் கிட்டத்தட்ட சம பலம், பலகீனங்களை உடையவை என்பதால், இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்:

ராஜஸ்தான் ராயல்ஸ் : ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ஜேம்ஸ் நீஷம், ரவிச்சந்திரன் அஷ்வின், யஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென், பிரசித் கிருஷ்ணா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஆரோன் பின்ச், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷெல்டன் ஜாக்சன் (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ், சுனில் நரைன், உமேஷ் யாதவ், அமன் கான், வருண் சக்ரவர்த்தி