சீர்காழி அருகே சுருக்குவலை பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி 9 கிராமங்களை சேர்ந்த சுருக்குவலை மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு மற்றும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் மீனவர் கிராமத்தில் சுருக்குலை பன்படுத்தும் மீனவ கிராமங்களில் ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பூம்புகார், பழையார், மடவாமேடு, கொட்டாயமேடு, கூழையார், தர்காஸ், வெள்ளைமணல், மன்மதன் நகர் உள்ளிட்ட மீனவர் கிராமங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் சுருக்கு வலை பயன்படுத்தும் 9 கிராம மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாகவும் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாகவும் தீர்மானம் நிறைவேற்றினர். மற்ற மாநிலங்களில் சுருக்குவலை பயன்படுத்த அனுமதி அளிக்கபடும் நிலையில் தமிழக அரசு மீனவர்களை கலந்தாலோசிக்காமல் தடை விதித்துள்ளதை கண்டித்தும் மறுபரிசீலனை செய்து அனுமதி வழங்க வலியுறுத்தியும் 9 கிராமங்களை சேர்ந்த சுருக்கு வலை பயன்படுத்தும் மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்தனர்.
இந்தத் தடையால் பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளதாக கூறிய மீனவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை தேர்தலை புறக்கணிப்பதுடன் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடர்வதாகவும் தெரிவித்தனர். அருகில் உள்ள 9 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் பயன்பாட்டில் உள்ள சுருக்குமடி வலையை தமிழக அரசு மட்டும் ஏன் தடை செய்தது எனக் கேள்வி எழுப்பிய மீனவர்கள் இந்தத் தடையால் பல கோடி ரூபாயய் மதிப்பிலான படகுகள் மற்றும் வலைகள் பழுதடைந்து கிடப்பதாக கவலை தெரிவித்தனர்.