தலித்துகளுக்கு எதிரான போக்கை பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிறுத்தாவிட்டால், தொண்டர்களோடு புத்தமதத்துக்கு மாற நேரிடும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியினர் கூட்டத்தில் பேசியவர், டாக்டர் அம்பேத்கர் 1935ஆம் ஆண்டு ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் தான் ஒரு இந்துவாக பிறந்தேன். இறக்கும்போது இந்துவாக இறக்க மாட்டேன் என்றார். இந்து மதத் தலைவர்களுக்கு சீர்திருத்தம் செய்ய 21 ஆண்டுகள் கொடுத்தார். ஆனால் அவர்களது அணுகுமுறைகளில் எந்த மாற்றமும் இல்லாததால் 1956இல் நாக்பூரில் புத்த மதத்திற்கு மாறினார். இந்து மதத்தின் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் காவலாளிகள் அவரது மாற்றத்திற்கு பிறகு தலித் மற்றும் பின்தங்கிய மக்களுக்கு மரியாதை கொடுப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் பின்தங்கிய சமூகங்களையும் தலித் மக்களையும் சுரண்டுவது இன்றும் தொடர்கிறது.
தலித்துகளுக்கு எதிரான போக்கை பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிறுத்தாவிட்டால் தொண்டர்களோடு இந்து மதத்தை விட்டு வெளியேறி, புத்தமதத்துக்கு மாற நேரிடும் என தெரிவித்தார். தலித்துகளுக்கும், பிற்பட்டோருக்கும் கிடைக்கும் சலுகைகள் அனைத்தும் அம்பேத்கரால் மட்டுமே கிடைத்து வருவதாகவும், அது காங்கிரஸ், பாஜக போன்ற எந்த கட்சியாலும் நடந்தேறவில்லை என்றும் குறிப்பிட்டார்.