டிரெண்டிங்

பணியிடங்களில் சுறுசுறுப்பாக இருக்க சில எளிய வழிகள்!

பணியிடங்களில் சுறுசுறுப்பாக இருக்க சில எளிய வழிகள்!

Sinekadhara

பணியிடங்களில் எதிர்மறைச் சூழல் என்பது தனி ஒருவரின் உற்சாகத்தைக் குறைத்துவிடும். அதனால் வேலையில் நாட்டமின்மை ஏற்படுவதோடு, தனிப்பட்ட முறையிலும் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். இதனால் மொத்த நிறுவனத்தின் உற்பத்தி பாதிக்கப்படும். தனி ஒருவரின் மன உறுதி உடையும்போது அது நிறுவனத்தையும் பாதிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டு எதிர்மறைகளை நீக்க சில வழிமுறைகளைக் கையாளலாம். 

கூடுதல் பொறுப்புகளை வழங்கவேண்டும்
வேலையில் பின்தங்கி இருப்பதை யாரும் விரும்பமாட்டார்கள். ஒவ்வொரு ஊழியரும் தனது வேலையில் சிறந்துவிளங்கத்தான் விரும்புவார்கள். ஒவ்வொரு இலக்கையும் பூர்த்திசெய்து பணியிடத்தில் தங்கள் பெயரை நிலைநிறுத்திக்கொள்ள விரும்புவார்கள். எனவே அவர்களுக்கு நிறைய பொறுப்புகள் மற்றும் வேலைகளைக் கொடுக்கும்போது அதன்மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதோடு, மகிழ்ச்சியாகவும், உற்சாகமாவும் இருப்பதுடன் கடின உழைப்பையும் தருவார்கள்.

அனைவரையும் சமமாக நடத்துங்கள்
வேலையிடங்களில் பாகுபாடு காட்டுதல் ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஒருவருக்கு மட்டும் ஆதரவு கொடுப்பதை தவிர்த்துவிடுவது நல்லது. அனைத்து ஊழியர்களையும் சமமாக நடத்துவதுடன், அனைவருக்கும் ஒரே அளவிலான வாய்ப்புகளையும், பொறுப்புகளையும் வழங்கவேண்டும். நிறுவனத்தின் கொள்கைகளுக்கு ஏற்றவாறு இலக்குகள் மற்றும் பொறுப்புகளை வழங்கி அதன்படி நடத்தவேண்டும்.

திறன்களை வெளிப்படுத்த வாய்ப்புகளை அளியுங்கள்
தனக்கு மேற்பொறுப்பில் உள்ளவர்களால் தங்கள் எண்ணங்கள் மற்றும் கருத்துகள் மதிக்கப்படும்போது பணியாளர்கள் தனக்கான அங்கீகாரமும் மதிப்பும் அங்கு கிடைத்திருப்பதாக உணருவார்கள். பணியாளர்கள் பேசவும், தங்கள் கருத்தை வெளிப்படுத்தவும் அனுமதிக்கப்படாதபோது, வேலையில் பின்னடைவையும், சோர்வையும் கண்கூடாகப் பார்க்கமுடியும். பணியாளர்களின் கேள்விகள் மற்றும் கருத்துகளுக்கு உடனடியாக பதில் கொடுப்பது அவசியம்.

அனைவரும் ஒன்றாக இருப்பது அவசியம்
தகவல்கள் சரிவர தெரிவிக்கப்படாமல் இருப்பதை எந்த பணியாரும் விரும்புவதில்லை. முக்கியமான முடிவுகள் மற்றும் உரையாடல்களில் அனைவரும் பங்கேற்க விரும்புவர். ஒரு முடிவை எடுக்க சிலர் தேவைப்பட்டாலும், அனைவரையும் அந்த இடத்தில் கூட்டுவது நல்லது. இதனால் நிறைய ஐடியாக்கள் கிடைப்பதுடன் பணியார்களும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தியதை நினைத்து பெருமிதம் அடைவார்கள்.

பணியாளர்களை பாராட்டுங்கள்
உங்கள் நிறுவனத்துக்குள்ளேயே விருதுகளை வழங்குவது பணியாளர்களை எப்போதும் உற்சாகத்துடன் வைத்திருப்பதுடன் அவர்களின் மன உறுதியை அதிகமாக்கி கடினமாக உழைக்கத் தூண்டக்கூடிய ஓர் சிறந்தவழி. விருது வாங்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே கடினமாக உழைக்க தோன்றும். இது நேர்மறையான பணியிடச்சூழலையும் உருவாக்கும்.

உங்கள் பணியாளர்கள்மீது நம்பிக்கை வையுங்கள்
தனிப்பட்ட மற்றும் பணியிடங்களில் நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். ஒவ்வொருவரும் மற்றவர்களை நம்பக்கூடிய வகையில் பாதுகாப்பான மற்றும் ஆரோக்யமான பணியிடங்களை உருவாக்குவது ஒவ்வொரு மேலாளர் மற்றும் மேற்பார்வையாளர்களின் கடமை. நேர்மை மற்றும் உண்மைத்தன்மையுடன் இருக்கும் பணியிடங்களில் ஊழியர்கள் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட நினைக்கமாட்டார்கள். இது குழுவாக இணைந்து செயல்படுதலுக்கும், வேலைத்திறனை அதிகரிப்பதற்கும் உந்துகோலாக இருக்கும்.