உதகை ரயில் நிலையம் அருகேயுள்ள புச்சர் தெருவில் வீட்டிற்குள் புகுந்த நீர் ஆமையை வனத்துறையினர் லாவகமாக மீட்டனர்.
நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை, உடும்பு, நீர் ஆமை, பறைவைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் புகழிடமாக திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் உதகை மலை ரயில் நிலையம் அருகேயுள்ள புச்சர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஆமை ஒன்று இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஆமையை லாவகமாக மீட்டனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் “இந்த ஆமை அரிய வகை நீர் ஆமை. தற்போது மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டம் முழுவதும் பசுமை திரும்பியுள்ளது. மேலும் வாகனங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால் நீர் ஆமை போன்ற உயிரினங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வர துவங்கியுள்ளது. இந்த நீர் ஆமை மார்லி மந்து வனப்பகுதியில் விடப்படும்” எனத் தெரிவித்தனர்.