டிரெண்டிங்

நெல்லையில் முதல்முறையாக தன்னார்வலர் பிளாஸ்மா தானம்!

நெல்லையில் முதல்முறையாக தன்னார்வலர் பிளாஸ்மா தானம்!

JustinDurai
(கோப்பு புகைப்படம்)

கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து குணமடைந்த நோயாளியின் உடலில் இருக்கும் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்றொரு நோயாளியின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கும் முறைதான் பிளாஸ்மா தெரபி. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 14 நாட்களுக்கு பிறகு தானம் அளிக்கலாம். தானம் பெறும் பிளாஸ்மாவை ஓராண்டு வரை பயன்படுத்தலாம். ஒருவர் கொடுக்கும் பிளாஸ்மா தானம் நான்கு பேர்களின் உயிரைக் காப்பாற்றும்.

கொரோனாவுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை நல்ல பலன் அளிப்பதால், தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன் வர வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் பிளாஸ்மா வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் நேற்று வரை 1,909 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவர் முதல்முறையாக பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தார்.

இவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சிகிச்சை பெற்று குணமடைந்தவர். ஒரு மாதமாக அவருக்கு எந்தவித  தொந்தரவு ஏற்படவில்லை. இதையடுத்து அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு அவரிடமிருந்து பிளாஸ்மா தானம், சிறப்பு தெரபி முறை மூலம் பெறப்பட்டது.