டிரெண்டிங்

விராட் கோலி ஒரு தேசவிரோதி: பாஜக எம்.எல்.ஏ பேச்சு

விராட் கோலி ஒரு தேசவிரோதி: பாஜக எம்.எல்.ஏ பேச்சு

rajakannan

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு தேச விரோதி என்று மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ. கடுமையாக விமர்சித்துள்ளார்.

விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்காவின் திருமணம் கடந்த டிசம்பர் 11-ம் தேதி இத்தாலி நாட்டில் நடைபெற்றது. கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்காமல் திடீரென இந்த திருமணம் நடைபெற்றது. கோலி-அனுஷ்கா ஜோடியின் திருமண மற்றும் ஹனிமூன் படங்கள் சமூக வலைதளங்கலில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து வருகின்ற டிசம்பர் 21-ம் தேதி டெல்லியிலும், டிசம்பர் 26-ம் தேதி மும்பையிலும் இந்த ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் திருமணம் செய்யாத விராட் கோலி ஒரு தேச விரோதி என்று மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ பன்னா லால் ஷக்யா கடுமையாக விமர்சித்துள்ளார். அம்மாநிலத்தின் குனா பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் திறன் இந்தியா மையத்தை திறந்து பேசிய போது இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “விராட் கோலி பணத்தையும், புகழையும் இந்தியாவில் சம்பாதித்தார். ஆனால் திருமணத்தை இத்தாலியில் செய்துள்ளார். வேறு யாரும் இதேபோல் வெளிநாட்டில் திருமணம் செய்யவில்லை. ராமர், கிருஷ்ணன் போன்ற கடவுள்கள் இதே மண்ணில் தான் திருமணம் செய்தனர். ஆனால் விராட் கோலி இத்தாலி சென்று திருமணம் முடித்துள்ளார். விராட் ஒரு தேச பற்றாளராக இருக்க முடியாது. இத்தாலியைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் இந்தியாவில் கோடீஸ்வரர்களாக மாறினர். ஆனால் கோலி இந்தியாவின் பணத்தை நாட்டிற்கு வெளியே கொண்டு சென்றுள்ளார்” என்றார்.

பாஜக எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி, “குஜராத் தேர்தலில் இருந்து தெளிவான செய்தி வெளிப்பட்டுள்ளது. தேசியவாத பிரச்சனைகளை கிளப்பாமல் மத்திய பிரதேசத்தில் தங்களை தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பதை பாஜக உணர்ந்துள்ளது. ஆனால், பாஜகவின் இந்த தந்திரம் மத்திய பிரதேசத்தில் அக்கட்சிக்கு உதவாது. பாஜக எம்.எல்.ஏ.வின் பேச்சு மிகவும் வருந்தத்தக்கது. பிரதமர் மோடி, முன்னாள் ராணுவ தளபதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் துணை குடியரசு தலைவர் ஆகியோரின் நேர்மை மீது கேள்வி எழுப்பி குஜராத்தில் வாக்குகளை வென்றுள்ளார்” என்றார்.