இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று பிறந்த நாள்.
1950-இல் இதே நாளில் குஜராத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள வாட்நகரில் பிறந்தார்.
இன்று 70-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமர் மோடியின் அரசியல் பயணம் ஒரு பார்வை.
ஆரம்ப நாட்கள்
1965இல் அகமதாபாத் ஜன் சங்கத்தில் இணைந்தார். அந்த இயக்கத்தின் கன்காரியா பகுதி வார்டு செயலாளராக பணியாற்றினார்.
தொடர்ந்து 1972இல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்தார். அதோடு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத வித்தியார்த்தி பரிஷத்திலும் ஆக்டிவாக செயல்பட்டார்.
அதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் குஜராத் லோக் சங்க்ஹார்ஷ் சமிதியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் மோடி.
முழுநேர அரசியல் பணி
1987இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து முழுநேர அரசியலில் ஈடுபட துவங்கினார். கட்சியில் இணைந்த ஒரே ஆண்டில் குஜராத் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து 1995இல் பாரதிய ஜனதா குஜராத் மாநிலத்தில் முதல்முறையாக ஆட்சி அமைத்தது. அந்த வெற்றியின் மூலம் பா.ஜ.கவின் தேசிய செயலாளரானார் மோடி. அன்று முதல் இன்று வரை பாரதிய ஜனதா தான் குஜராத்தில் ஆட்சி செய்து வருகிறது.
1998இல் பா.ஜ.கவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அரசியல் திருப்புமுனை
2001-இல் மோடியின் வாழ்வில் அரசியல் திருப்புமுனை ஏற்பட்டது. அதற்கு காரணம் அப்போதைய பிரதமர் வாஜ்பாய்.
குஜராத் முதல்வர் கேஷுபாய் பட்டேலின் உடல்நலன் குன்றியதால் மோடியை முதல்வராக பணியாற்ற சொன்னார் வாஜ்பாய்.
அதன்படி குஜராத் முதல்வரானார் மோடி. 2002இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். கடந்த 2012 வரை குஜராத் மாநில முதல்வராக மோடி பணியாற்றினார்.
பிரதமர் மோடி
குஜராத்தில் அவரது ஆட்சி காலத்தில் அவர் செய்த சாதனைகளை முன்னிறுத்தி 2014 பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டார்.
வாரணாசி தொகுதியில் நின்று போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று இந்திய பிரதமரானார். கடந்த 2019 தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட மோடி மீண்டும் அதில் வென்று காட்டினார் மோடி.
தான் அங்கம் வகிக்கின்ற அமைப்பு மற்றும் கட்சியின் கொள்கைகளை தீவிரமாக கடைபிடிப்பவரே தலைவராவதற்கான தகுதியை கொண்டவர்கள். மோடியும் தான் சார்ந்திருக்கின்ற அமைப்பின் கொள்கையை உயிர் மூச்சாக கருதுகின்ற அரசியல் தலைவர். அது தான் அவரது வெற்றிக்கும் காரணம்.